தமிழுக்கு உயிரூட்டியவர்கள் ஆழ்வார்கள்

தமிழுக்கு உயிரூட்டியவர்கள் ஆழ்வார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.


தமிழுக்கு உயிரூட்டியவர்கள் ஆழ்வார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் சார்பில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இலக்கிய விழாவுக்கு முனைவர் பிரேமா நந்தகுமார் தலைமை வகித்தார். நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் பொருளாளர் சண்முகசிதம்பரம் முன்னிலை வகித்தார். திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ஐ.அரங்கராசன் வரவேற்று பேசினார்.
விழாவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேந்தமிழ் திவ்யப் பிரபந்தம் என்ற தலைப்பில் பேசியது: நாலாயிர திவ்யப் பிரபந்தம் 3,892 பாசுரங்கள்,108 ஸ்தலங்கள், 4,000 பிரபந்தங்களையும் உள்ளடக்கியது. 12 ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற இவை அழகிய தமிழ்ச்சொற்களால் ஆனவையாகும். இதன் மூலம் ஆழ்வார்கள் தமிழுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள் என்பதில் பெருமை கொள்ள வேண்டியதாகும். ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழுக்கு உயிரூட்டிய விதத்தை பலமுறை பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.
தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை படியுங்கள், சாதி உணர்வுகளுக்கும், சமயச் சண்டைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள், அந்த இலக்கியத் தேனை முழுவதுமாக பருகுங்கள் என்றார். ஆயர்பாடியின் பெருமைகளை ஆண்டாள் பாடல்களில் காண முடிகிறது. ஆண்டாளின் திருமணக்கனவு வாரணம் ஆயிரம் என்ற பாடலில் வெளிப்படுகிறது. மொத்தம் 108 ஸ்தலங்களைப் பாடி தமிழுக்கும், அத்திருக்கோயில்களுக்கும் பெருமை சேர்த்த பெருமக்கள் ஆழ்வார்கள்.
நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களை தொகுத்தவர் கூர்மாச்சாரியார். இவர் 1856 ஆம் ஆண்டு முதல் 1859 வரை பிரபந்தங்களைப் பதிப்பித்தார். அதன் பின்னர் 1865 ஆம் ஆண்டு முடக்கூர் அப்பாவு முதலியாரும்,1973 ஆம் ஆண்டு அந்தாச்சாரி ஐயங்காரும் பதிப்பித்தார்கள். அதன் பின்னர் அறக்கட்டளை ஒன்று 1976 ஆம் ஆண்டு நூலாக கொண்டு வந்தது.அதற்கு ரங்காச்சாரியார் மதிப்புரை எழுதினார்.ஆழ்வார்களின் பாடல்கள் அனைத்தும் மங்களாசாசனம் செய்யப்பட்டது.மதுரகவியாழ்வாரின் பாடல்கள் அனைத்தும் நம்மாழ்வாரையே இறைவனாக பாடுகிறது.நம்மாழ்வாரையே இறைவனாக பார்த்தவர் மதுரகவியாழ்வார்.
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் பெரும்பாலான பாடல்கள் பக்தியை மட்டும் சொல்லவில்லை, சமயநல்லிணக்கத்தையும், இயற்கையையும் பாடினார்கள் என்றார் வைகோ.
முன்னதாக மண்டப நுழைவுவாயிலில் பட்டாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதையுடன் தமிழாசிப் பாடல்களை பாடிக் கொண்டே மண்டபத்துக்குள் வைகோவை அழைத்து வந்தனர்.
விழாவின் நிறைவில் மதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி.சோமு நன்றி கூறினார்.
இவ்விழாவில் தமிழகம் முழுவதுமிருந்து மதிமுக நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சாரியார்கள், தமிழ் ஆர்வலர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com