மூன்று கடமைகளில் தவறாமல் இருந்தால் சாதிக்கலாம் ;அழகப்பா பல்கலை. துணைவேந்தர் பேச்சு

பெற்றோர், ஆசிரியர், நல்ல நட்பு ஆகிய மூன்று கடமைகளிலும் தவறாமல் இருந்தால் வாழ்வில் சாதிக்கலாம் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் என். ராஜேந்திரன்.


பெற்றோர், ஆசிரியர், நல்ல நட்பு ஆகிய மூன்று கடமைகளிலும் தவறாமல் இருந்தால் வாழ்வில் சாதிக்கலாம் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் என். ராஜேந்திரன்.
ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி அவர் மேலும் பேசியது:
அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போலவே மதிக்கப்படுவர் என்ற வள்ளுவரின் வாக்கை மனதில் பதிந்து மாணவர்கள் கல்வி கற்க வேண்டும். கல்வி என்பது ஏட்டுக் கல்வியாக இல்லாமல் சிந்தனையைத் தூண்டுவதாகவும், எதையும் ஏன், எதற்கு என்று ஆராய்வதாக இருக்க வேண்டும். உயர் கல்வியில் பட்டம் பெறுவது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. பட்டம் பெற்றவுடன் கல்வி கற்பது நின்றுவிடாது. வாழ்க்கைக் கல்வியை கற்பதற்கான ஆரம்பப் புள்ளியே பட்டம் பெறும் நிகழ்வாகும். கல்விக்கு எல்லையே இல்லை.
இந்தியா சுதந்திரம் பெறும்போது 20 பல்கலைக் கழகங்கள், 500 கல்லூரிகள் இருந்தன. இப்போது, 941 பல்கலைக் கழகங்கள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் வந்துவிட்டன. கல்வி என்பது கற்போரை உருவாக்காமல் மனிதனை உருவாக்கும் வகையில் அமைய வேண்டும்.
பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்தி உயர்கல்வி என்ன என்றால் அறிந்திராத பெற்றோரின் முதல் தலைமுறைக் குழந்தைகள் பலரும் பட்டம் பெறுவது பெருமைக்குரியது. முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருந்தாலும், பட்டம் பெறாத மாணவர்களாக இருந்தாலும் 3 கடமைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
முதலில் தங்களது பெற்றோருக்கு மரியாதை செலுத்த வேண்டும். உடல் உழைப்பு, பொருளாதாரம் என அனைத்தையும் தந்து கல்வி கற்க வைத்தது அவர்கள்தான் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். சமூகப் பொருளாதாரக் காரணங்களால் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து, ஒற்றைக் குடும்பம் என்பது தவிர்க்க முடியாமல்போனது. முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையை தங்களது பெற்றோருக்கு அளிக்கக் கூடாது என மாணவர்கள் உறுதியேற்க வேண்டும். குடும்பம் முன்னேறினால் சமூகம் முன்னேறும். சமூகம் முன்னேறினால் நாடு முன்னேறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியருக்கு மரியாதை செலுத்த வேண்டும். எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதற்கேற்ப ஆசிரியருக்கு இரண்டாவதாக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உலகத்தைக் கண் முன் நிறுத்தி, சிந்தனையைத் தூண்டி, சமூகத்தை நமக்கு அடையாளம் காட்டுவது ஆசிரியர்களே. மூன்றாவதாக நல்லோரை நட்பாகக் கொள்ள வேண்டும். இந்த மூன்று கடமைகளிலும் தவறாது இருந்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியும்.
பெண்களுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்பதே ஐ.நா. சபையின் அறைகூவலாக உள்ளது. பெண்கள் முன்னேற வேண்டுமெனில் கல்வி அவசியம். கல்வியே பெண்களை நல்ல நிலைக்கு உயர்த்தி வேலைவாய்ப்பை அளித்து சமூக அந்தஸ்தை பெற்றுத் தரும். விண்வெளி ஆராய்ச்சி வரை அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதிக்கத் தொடங்கிவிட்டனர்.
சங்கம் வைத்து இலக்கியம் வளர்த்த தமிழ்ச் சமூகம் பெண்களுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி என்பதே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பட்டம் பெறும் தலைமுறையினர் தொழில்முனைவோராக வர வேண்டும். குறிப்பாக, பெண்கள் அதிகளவில் தொழில்முனைவோராக வேண்டும். புதிய சிந்தனைகளுக்கு ஏற்ப தொழில் தொடங்க ஆலோசனைகளும், கடனுதவிகளும் வழங்க ஆய்வு மையங்களும், அரசுகளும் தயாராகவுள்ளன. இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
விழாவில், 1,385 மாணவிகள் பட்டங்களும், 51 மாணவிகள் பதக்கங்களும் பெற்றனர். ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரிச் செயலர் எஸ். குஞ்சிதபாதம், கல்லூரி முதல்வர் எஸ். வித்யாலட்சுமி, துணை முதல்வர் எம். ரெமா ஆகியோர் வாழ்த்தினர். அனைத்து துறை மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com