ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் தைத்தேர் (பூபதித் திருநாள்) திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை


ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் தைத்தேர் (பூபதித் திருநாள்) திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது. வரும் 20 ஆம் தேதி தைத்தேர் நடைபெறுகிறது.
கி.பி. 1413 ஆம் ஆண்டு விஜயநகர மன்னனான வீரபூபதி உடையார், 135 பொன் கொடுத்து இவ்விழா தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
நிகழாண்டுக்கான கொடியேற்ற விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்தில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு 4.30 மணிக்கு கொடியேற்ற மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். 
தொடர்ந்து, தனுர் லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனை அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
தொடர்ந்து, 7.30 மணிக்கு நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு சந்தன மண்டபத்தில் உள்ள கண்ணாடி அறைக்கு வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 
மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை பேரிதாபனம் நடைபெற்றது. பின்னர் 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு உள் திருவீதி வலம் வந்து சந்தனு மண்டபத்தை இரவு 8.15 மணிக்கு சென்று சேர்ந்தார். 
8.45 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளி கண்ணாடி அறைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு சென்று சேருகிறார் நம்பெருமாள். 
11 நாள்கள் நடைபெறும் இந்த தைத்தேர் விழாவில் நம்பெருமாள் தினசரி காலை, மாலை இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். 
வரும் 15 ஆம் தேதி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 20 ஆம் தேதி தைத்தேர் திருவிழா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
சமயபுரத்தில்... திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. 
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 7 மணிக்கு கோயிலின் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு மஹா தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி, திருவீதி உலா நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை, கோயில் அலுவலக கண்காணிப்பாளர் ராஜாங்கம், கோயில் மணியக்காரர் ரமணி, புலவர் ஜெகநாதன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். வரும் 13 ஆம் தேதி தொடங்கும் தைப்பூசத் திருவிழா 22 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com