ஆசிரியர், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 8 இடங்களில் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில்

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் 40 சதவீத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டதாக போராட்டக் குழு  தரப்பிலும், 22.4 சத ஊழியர்கள் கலந்து கொண்டதாக மாவட்ட நிர்வாகமும் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாது, 8 இடங்களில் கோரிக்கை விளக்க கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
பங்களிப்பு ஓய்வுதியத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய முறையை நடை முறைப்படுத்த வேண்டும். 7ஆவது ஊதிய குழுவின் முரண்பாடுகளை களையும் நோக்கில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 14,062 ஆசிரியர்களில் 6,400 பேர் பணிக்கு வரவில்லை. 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதேபோல,  வருவாய்த்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் அலுவலர்கள் முதல் ஊழியர்கள் வரையிலான 1,767 பேரில் 1,215 பேர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இதில், எந்தவித முன்அனுமதியும் பெறாமல் 295 பேர் பணிக்கு வராமலிருந்தனர்.  போராட்டத்தில் 25 சதவீதம் பேர் பங்கேற்றனர்.
இதேபோல, ஊரக வளர்ச்சித்துறையில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் உதவியாளர் நிலையிலான ஊழியர்கள் 691 பேரில், 385 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர். 
முன்அனுமதி பெறாமல் 271 பேர் வருகைதரவில்லை. 39 சதவீதம் பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.  404 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர்கள் 349 பேரில் 279 பேர் பணிக்கு வந்திருந்தனர். 68 பேர் எந்தவித அனுமதியும் பெறாமல் அலுவலகத்துக்கு வரவில்லை. 19 சதவீதம் பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். 
இதேபோல், பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி மையம், சத்துணவு மையம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, தொழிலாளர் நலத்துறை, கருவூலத்துறை என பல்வேறு துறைகளில் 40 சதவீதம் பேர் போராட்டத்தில் பங்கேற்றதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். 
ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் மொத்தமுள்ள 48 அலுவலகங்களில்  32,255 பேருக்கு 24,317 பேர் வந்திருந்ததாகவும், 7239 பேர் மட்டுமே முன்அனுமதியின்றி வருகை தரவில்லை என்றும்,  22.4 சதவீதம் பேர்  மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்:  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பழைய ஆட்சியரகம் சாலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அமல் ஜேசுராஜ், மோகனா ஆகியோர் தலைமை வகித்தனர். 
இதில், 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். 
போராட்டம் காரணமாக ஓராசிரியர் மட்டுமே உள்ள கிராமப்புற, நகர்ப்புற பள்ளிகள் சில மூடப்பட்டிருந்தன. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் மட்டுமே வகுப்புக்கு வந்திருந்தனர். 
பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இன்றி இருக்கைகள் காலியாக கிடந்தன.
இதுதொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் மன்ற மாநில மகளிரணிச் செயலர் மதனா கூறியது: பிரதான கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும். புதன், வியாழக்கிழமைகளில் வட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். ஜன.25ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் நடைபெறும் என்றார்.
மணப்பாறை: மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.சேவியர் பால்ராஜ், அ.பாக்கியசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துறையூர்: துறையூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்  ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்150 ஆண்களும், 70 பெண்களும் பங்கேற்றனர். 
முசிறி:  முசிறியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அமைப்பின் முசிறி வட்ட செயலாளர்  சம்சுதீன் தலைமை  வகித்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதேபோல, மண்ணச்சநல்லூர், தொட்டியம், லால்குடி, திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com