ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல்: 1,658 பேர் கைது

திருச்சியில் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 1, 658 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டன


திருச்சியில் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 1, 658 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும் 2, 521 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 7ஆவது நாளான திங்கள்கிழமை காலை  மாவட்ட ஆட்சியரகம்  குவிந்தனர். இவர்களுக்கு ஆதரவாக சத்துணவு பணியாளர்கள் சங்கம்,  காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 1, 658 பேர்  கைது செய்யப்பட்டு, ஆங்காங்கே உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 2, 521 பேருக்கும் விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட  ஜாக்டோ -ஜியோ திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பொன். செல்வராஜ் மற்றும் கா. செல்வராஜ் ஆகியோர் கூறுகையில்,  நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறோம். ஆனால் அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது.  அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்க நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் லட்சக்கணக்கான இளையோர் வேலையின்றி காத்திருக்கும் நிலையில்,  பயிற்சி முடித்த இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்துவதைத்தான் எதிர்க்கிறோம். எங்கள் கோரிக்கைகள் குறித்து உயர் நிலைத் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க வேண்டும்.
அதைவிடுத்து கைது மற்றும் பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டால், போராட்டமும் தொடரும் என்றனர். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. ராமகிருட்டிணன் கூறுகையில்,  மாவட்டத்தில் சுமார் 3,500 பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் நிலையில், அரசு உத்தரவிட்டால்  அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர். தற்போதும் சுமார் 800 பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு பூட்டப்பட்ட பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
பணிக்கு திரும்பிய 23,301 பேர்!
போராட்டம் குறித்து மாவட்ட ஆட்சியரகம் அளித்துள்ள புள்ளி விவரப்படி, திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் (ஜாக்டோ-ஜியோ) எண்ணிக்கையான 30,730 பேரில், 23, 301 பேர்  பணிக்கு வந்துள்ளனர்.  576 பேர் அனுமதியுடன் விடுப்பு எடுத்தும், 6, 851 பேர் அதாவது 22.3 சதவிகிதம்பேர் பணிக்கு வராமல் (போராட்டத்தில் ஈடுபட்டோர் ) உள்ளனர். இதில் ஆசிரியர்கள் மட்டும் மொத்தம் 12, 316 பேர், பணிக்கு வராதவர்கள் 5,288 பேர், இது 42.9 சதவிகிதம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com