பள்ளியில் தவறி விழுந்து மாணவி பலி: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
By DIN | Published On : 14th June 2019 10:09 AM | Last Updated : 14th June 2019 10:09 AM | அ+அ அ- |

திருச்சி தனியார் பள்ளியில் மாடிப்படியில் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட அதிகாரிகள் 2 வாரத்தில் அறிக்கை அனுப்ப மாநில மனித உரிமை ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருச்சி உறையூர் டாக்கர் தெருவைச் சேர்ந்த ராம்குமார் மகள் இலக்கியா (13). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த 7 ஆம் தேதி மதிய இடைவேளையில் பள்ளி மாடிப்படியில் விளையாடியபோது தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இலக்கியா திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜூன் 11-இல் உயிரிழந்தார்.
இதையடுத்து இலக்கியாவின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு மறியல் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த உறையூர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சம்பவம் குறித்து ஊடகச் செய்திகள் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் உறுப்பினர் ஏ. சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடிவு செய்தார்.
இதன் பேரில் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் அறிக்கை குறித்து 2 வாரத்தில் அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர்ஆகியோருக்கு வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் மாவட்ட அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.