திருச்சி முகாம் சிறையில் தொடரும் கைதிகளின் உண்ணாவிரதம்
By DIN | Published On : 18th June 2019 08:39 AM | Last Updated : 18th June 2019 08:39 AM | அ+அ அ- |

திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வங்கதேசத்தைச் சேர்ந்த 14 கைதிகள், தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம், மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டு கைதிகளை அடைத்து வைப்பதற்கான முகாம் சிறை உள்ளது. இங்கு தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா நாடுகளைச் சேர்ந்த 54 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் வங்கதேசத்தைச் சேர்ந்த 14 பேர், தங்களுக்கான தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் முறைகேடாக அடைத்து வைத்திருப்பதாகக் கூறியும், உடனடியாக விடுவிக்கக் கோரியும் சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முகாம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், சிறை நிர்வாகத்தினர் அளித்த உணவுகளை உண்ண போராட்டத்தில் ஈடுபட்டோர் மறுத்துவிட்டனர். எனினும் சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.