ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண் தொழிலாளர்கள்

சோழமாதேவி ஊராட்சிச் செயலர் மீது நடவடிக்கைக் கோரி, திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தை நூறு நாள் வேலைத்திட்ட பெண்


திருச்சி: சோழமாதேவி ஊராட்சிச் செயலர் மீது நடவடிக்கைக் கோரி, திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தை நூறு நாள் வேலைத்திட்ட பெண் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சோழமாதேவி ஊராட்சிச் செயலர் சூசைராஜ்,  இக்கிராமத் தொழிலாளர்களுக்கு 50 முதல் 60 நாள்கள் மட்டுமே வேலை வழங்குவதாகவும்,   அவ்வாறு வழங்கினாலும் 7  கி.மீ. தொலைவுக்கு அப்பால்சென்று வேலை செய்யும் வகையில் பணிகளை வழங்கி வருவதாகவும் புகார்கள் எழுந்தன.
அண்மையில் பணியின்போது மயங்கி விழுந்த பெண் தொழிலாளி சகுந்தலாவை, சகத் தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அனைவருக்கும் விடுப்பு  என வருகைப் பதிவேட்டில் ஊராட்சிச் செயலர் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியரிடம் சென்று எவ்வாறு புகார் அளிக்கலாம், அவ்வாறு புகார் தெரிவித்தவர்களுக்கு வேலை வழங்க முடியாது எனக் கூறியதாகவும் தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தை  செவ்வாய்க்கிழமை காலை முற்றுகையிட்டு, ஊராட்சிச் செயலர் சூசைராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்னா மேற்கொண்டனர். இதையடுத்து,  போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம்  திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியப்பன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதில், 10 நாள்களில் சூசைராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com