மகளிர் தோட்டக்கலைக் கல்லூரியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி நவலூர் குட்டப்பட்டிலுள்ள அரசு மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி முதல்வரின் நடவடிக்கையைக் கண்டித்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள்

திருச்சி: திருச்சி நவலூர் குட்டப்பட்டிலுள்ள அரசு மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி முதல்வரின் நடவடிக்கையைக் கண்டித்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கல்லூரியில், துப்புரவு உள்ளிட்ட கடைநிலைப் பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.
இங்கு கடைநிலை ஊழியராகப்  பணியாற்றி வரும்  ஜோசப் (59) என்பவரை, சரிவர பணிகள் மேற்கொள்ளவில்லை எனக்கூறி கல்லூரியின் முதல்வர் சரளாதேவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை காலை  தொழிலாளி ஜோசப் தற்கொலைக்கு முயன்றதாக கூறி,  சகத் தொழிலாளர்கள், கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். தொழிலாளர்களை விரோதியாக பார்க்கும் கல்லூரி முதல்வர், பாதிக்கப்பட்ட நபரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது 3 ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வரும் முதல்வரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஆனால் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், ஜோசப் 59 வயதானவர், மேலும் அவருக்கு ரத்த அழுத்தப் பாதிப்பு இருந்துள்ளது.  கல்லூரி முதல்வர் அவரை பணிசெய்யவில்லை என கண்டித்ததால், வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில்,  ரத்த அழுத்தம்  அதிகரித்துள்ளது. இதனையடுத்து அவர் விரக்தியில், இந்த நிலைக்கு நான் இறந்தே போகலாம் எனக் கூறினாராம்.  இதனை பெரிதுபடுத்திய சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதல்வர் சற்று கண்டிப்பாக இருப்பவர் என்ற காரணத்தைக் காட்டி அவரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர் எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com