தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை புனரமைக்க ரூ.257 கோடி

தமிழகத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமுள்ள மாவட்டங்களாகக் கருதப்படும் 18 மாவட்டங்களில்

தமிழகத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமுள்ள மாவட்டங்களாகக் கருதப்படும் 18 மாவட்டங்களில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என். மகேஸ்வரன் தெரிவித்தார்.
திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மழை இல்லாததால் நிகழாண்டு தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காவிரி, தாமிரவருணி, வைகை உள்ளிட்ட ஆற்றுப்படுகைகளில் போடப்பட்டுள்ள போர்வெல், அதன் அருகில் உள்ள போர்வெல்களில் 85 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளது. ஆனால், நிலத்தடி நீர்மட்டம் 17.6 மீட்டருக்கு கீழ் உள்ளது. கிடைக்கும் தண்ணீரை முறையாக அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் இணைப்புகள் இல்லாத மற்றும் தற்போதைய சூழலில் குடிநீர் வழங்க முடியாத கிராமங்களைக் கண்டறிந்து லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
49,144 கிராமங்களில் 534 குடியிருப்புப் பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 18 மாவட்டங்களில் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. 
எனவே, இந்த மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இவற்றில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 லாரிகள் மூலம் (லாரி ஒன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர்) ஜூன் 24 முதல் குடிநீர் விநியோகம் தொடங்கியுள்ளது. இதேபோல, பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் தேவைக்கேற்ப லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும்.
காவிரிப் படுகைகளில் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளது. ஆற்றுப்படுகை இல்லாத மாவட்டங்களில் மட்டுமே தட்டுப்பாடு உள்ளது. இருப்பினும், ஏற்கெனவே உள்ள குடிநீர்த் திட்டங்களுக்கு நீராதாரத்தை மேம்படுத்தித் தரும் வகையில் புதிதாக நிகழாண்டு 325 பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில், 154 இடங்களில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நீர் உறிஞ்சு கிணறுகள், கால்வாய் மடை மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் போதிய தண்ணீர் கிடைக்காத பகுதிகளுக்கு வேறு திட்டங்களில் இருந்து குடிநீர் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நிலைகளில் ரூ. 291 கோடி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 
திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் 17 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் ரூ.13.50 கோடியில் புனரமைக்கப்படுகிறது. இவைதவிர மாநிலம் முழுவதும் 99 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைப் புனரமைக்க ரூ. 244 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. 2019-20ஆம் ஆண்டுக்கும் ரூ. 173 கோடி பெறப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளன.
இதுமட்டுமல்லாது குடிநீர்வாரிய கட்டுப்பாட்டில் மொத்தம் உள்ள 556 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும் 228 செயல் மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் தனி குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. பொதுமக்களும் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். உதவிக்கும், புகார் தெரிவிக்கவும் 94458-02145 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். குடிநீர்த் திட்டங்களில் மாற்று நபர்கள் எந்த வகையான குறுக்கீடு செய்தாலும் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது, திருச்சி மாவட்ட  ஆட்சியர் சு. சிவராசு உடனிருந்தார்.
 


ஜோலார்பேட்டையிலிருந்து ஒரு வாரத்துக்குள் தண்ணீர்
"சென்னைக்கு ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. வேலூர் மாவட்டத் தலைமைப் பொறியாளர் தலைமையில் 17 பொறியாளர்கள் போர்க்கால அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு வாரத்துக்குள் சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தண்ணீர் வரத் தொடங்கினால் சென்னையில் பற்றாக்குறையின்றி குடிநீர் வழங்க முடியும்' என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என். மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com