பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள்

திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளை மாநகராட்சி

திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் பட்டியலிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட  செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியும் தேர்வாகி இருப்பதால் மாநகரைப் பொலிவுபடுத்தும் வகையில் பல்வேறு முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ரூ. 17.34 கோடியில் மேம்படுத்தப்படும். திருச்சி மாநகரில் உள்ள 16 பூங்காக்கள் மற்றும் 5 போக்குவரத்து திட்டுக்கள் அழகுபடுத்தும் பணி ரூ.15.68 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. தில்லை நகர் 7 ஆவது குறுக்குத் தெருவில் ரூ. 15 கோடியில் புதிய வணிக வளாகமும், ரூ. 65.61 கோடியில் புதை வடிகால் திட்டமும்,ரூ. 49 கோடியில் அரியமங்கலம் குப்பைக்கிடங்கை விஞ்ஞான முறையில் தீர்வு காணும் பணிகளும் நடந்து வருகின்றன.
உய்யக்கொண்டான் கால்வாய்க்கரையை மேம்படுத்தும் பணி ரூ.17.56 கோடியிலும், மின் ஆற்றல் சேமிப்பின் மூலம் எல்.இ.டி. விளக்குகளாக மாநகரை மாற்றும் பணிகள் ரூ. 23.40 கோடியிலும் நடந்து வருகின்றன. இவை தவிர ரூ.30 கோடியில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், ரூ. 19.70 கோடியில் பன் அடுக்கு வாகனம் நிறுத்துமிடம், பஞ்சப்பூரில் தரைமட்ட சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கும் பணி ரூ.13.50 கோடியிலும், ரூ. 6.44 கோடியில் அலுவலகக் கட்டடங்களில் சூரிய ஒளி மேற்கூரைகள் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
யாத்ரீகர் நிவாஸ் கட்டுமானப் பணிக்கும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட் பகுதியில் போர் நினைவுச் சின்னத்தை மின் விளக்குகளால் ஒளிரச் செய்யும் பணி 99.99 லட்சத்தில் செய்திடவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிப் பணிகளான மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி,ஒளிக் காட்சி அமைத்தல், மெயின்கார்டு கேட் நுழைவு வாயிலை வண்ண மின் விளக்குகளால் ஒளிரச்செய்யும் பணி, மலைக்கோட்டையை மின்விளக்குகளால் ஒளிரச் செய்யும் பணி, புராதனப் பூங்கா அமைக்கும் பணி ஆகியன ரூ.38.19 கோடி மதிப்பிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.
 புத்தூர் தினசரி சந்தையில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி ரூ.20.20 கோடியிலும் தொடங்கப்படவுள்ளது. இது தவிர மேலும் சில பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.இப்பணிகளுக்காக நிர்வாக அனுமதி பெற்றவுடன் மக்களுக்கு அவ்வப்போது திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்படும் எனவும் ஆணையர் ந. ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com