மருத்துவப் படிப்புக்கு இடம் பெற்று தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி

திருச்சியில் மருத்துவப் படிப்புக்கு இடம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்துள்ளதாக மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் மருத்துவப் படிப்புக்கு இடம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்துள்ளதாக மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரி பகுதியைச் சேர்ந்த கிஷோர்குமார் -மாலதி (51) தம்பதியர்  தங்களது மகளை கடந்த 2015 ஆண்டு,  மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டனர்.  அப்போது  பெங்களூரைச் சேர்ந்த பீஜைசர்க்கார் மற்றும் அவரது மனைவி விஜயா சர்க்கார் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் இருவரும் தங்களுக்கு மருத்துவத் துறையில் செல்வாக்கு உள்ளதாகவும், பெங்களூரில் உள்ள பி.ஜி.எஸ். மருத்துவ அறிவியல் மையத்தில் எம்.பி.பி.எஸ்.  சீட் பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ. 10 லட்சம் தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
அதை நம்பிய மாலதி, கடந்த 2015 அக். 20 ஆம் தேதி, திருச்சியில் ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பீஜைசர்க்கார் தம்பதியிடம் ரூ. 10 லட்சத்தை வழங்கியுள்ளனர். ஆனால் குறிப்பிட்டபடி மருத்துவ படிப்புக்கு சீட் பெற்றுத் தரவில்லை. இதையடுத்து கொடுத்த பணத்தைக் கேட்டபோது திருப்பித் தராமல் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்து வந்தனர். இதையடுத்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸில் மாலதி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதியப்பட்டு, ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான தனிப்படைப் போலீஸார் பெங்களூர் விரைந்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று வேறு மோசடிகளில் இந்த நபர்கள் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். 
மற்றுமொரு வழக்கு : திருச்சி, கண்டோன்மென்ட்  பாரதியார் சாலை  பகுதியில் இயங்கும் வேகஸ் டெக்னாலஜி பி. லிட் என்ற தனியார் மென்பொருள் நிறுவனத்தில் தொழிலாளர் நல அதிகாரியாக இருப்பவர் எஸ். சண்முகப்ரியா. 
இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸில் திங்கள்கிழமை அளித்த புகாரில் தங்களது நிறுவனத்தில் பணியாற்றிய ஆர்.பி. விக்னேஷ், பி. பரமேஸ்வரன், எம். ஸ்ரீவத்சன், ஜெ. அரவிந்த் ஆகிய 4 பேரும், நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் உள்ள டேட்டா விவரங்களை முறைகேடாகப் பதிவு செய்து பிற நிறுவனங்களுக்கு அளித்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதன்படி வழக்குப் பதிந்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com