அடுத்த கல்வியாண்டில் கலை மற்றும் கல்வியியல் கல்லூரி தொடங்க முடிவு: சி.எஸ்.ஐ. பேராயர் தகவல்

தென்னிந்திய திருச்சபையின் திருச்சி, தஞ்சாவூர் மண்டலத்தின் சார்பில், 2020-21ஆம் கல்வியாண்டு முதல் புதிதாக

தென்னிந்திய திருச்சபையின் திருச்சி, தஞ்சாவூர் மண்டலத்தின் சார்பில், 2020-21ஆம் கல்வியாண்டு முதல் புதிதாக கலைக் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி தொடங்கப்படும் என்றார் அதன் பேராயர் த. சந்திரசேகரன்.
இதுகுறித்து திருச்சியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:தென்னிந்திய திருச்சபையின் திருச்சி, தஞ்சை மண்டல நிர்வாகமானது 13 வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது.  நாகப்பட்டினத்தில் தொடங்கி, கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை வரை எல்லையைக் கொண்டுள்ளது. 
250 ஆண்டுகளுக்கு மேலாக கல்விப் பணியிலும், சமூகப்பணியிலும் தீவிரமாக செயல்பட்டு  வரும் இந்த சபையின் கீழ், 3 கல்லூரிகள், 17 மேல்நிலைப் பள்ளிகள், 2 உயர்நிலைப் பள்ளிகள், 52 ஆரம்பப் பள்ளிகள், 2 மெட்ரிக் பள்ளிகள், கரூர், தாராபுரம், திருச்சியில் என 3 தொழிற்பயிற்சிப் பள்ளிகள், தாராபுரம் செவிலியர் கல்லூரிஆகியவை இயங்கி வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது.
 அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களாக, அரசின் வழிகாட்டுதலுடன் ஏழை, எளிய, நடுத்தர, கிராமப்புற மாணவர்களுக்கு அதிக சேர்க்கை நடைபெறுகிறது.நிகழாண்டு மாணவர் சேர்க்கையில் 10 முதல் 15 சதவிகிதம் பேர் மட்டுமே கிறிஸ்தவர்களாக உள்ளனர். ஏனைய அனைவரும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் ஆவர். சீர்மரபினர், மலைவாழ் சமூகத்தினரது குழந்தைகளும் சேர்க்கை பெற்றுள்ளனர்.
 திருச்சியில் உள்ள வெஸ்ட்ரி பள்ளியில் நிகழாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. 
முதல்கட்டமாக எல்கேஜி முதல் 6 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. இதன் தொடர்ச்சியாக வரும் கல்வியாண்டில் (2020-21) சமயபுரம் அருகிலுள்ள இருங்களூரில் கலைக் கல்லூரியும், கரூரில் கல்வியியல் கல்லூரியும் தொடங்கப்படவுள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது, உயர்கல்வி ஒருங்கிணைப்பாளர் ரெல்டன் ஜேம்ஸ், மண்டல பொருளாளர் எஸ். ராஜேந்திரன்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com