உயிரினங்களின் பெயர்களும் மொழியை வளர்க்கப் பயன்படுகின்றன
By DIN | Published On : 24th March 2019 03:03 AM | Last Updated : 24th March 2019 03:03 AM | அ+அ அ- |

தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் பெயர்களையும் ஆராய்ந்து பார்த்தால் அவையும் மொழியை வளர்க்க பயன்படுவது புரியும் என்றார் இயற்கை ஆர்வலர் எஸ்.தியோடர் பாஸ்கரன்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சுற்றுச்சூழல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் கல்லூரியின் கலையரங்கத்தில் நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கத்தை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது: தாவரங்கள்,உயிரினங்கள் சிலவற்றின் பெயர்கள் பலவும் தகவல்களைப் பலவற்றை அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. பறவைகளில் கொண்டலாத்தி, குக்குறுவான், கழுத்தறுத்தான் போன்றவற்றின் பெயர்கள் ஏன் வந்தது என்பதை அறிந்து கொள்ளும்போது அவை தமிழ் மொழியை வளர்க்க பெரிதும் துணையாக இருப்பது தெரிய வரும். பழமொழிகள் பலவும் விலங்குகள், உயிரினங்கள் பெயிரில் அமைந்திருக்கின்றன.யானைக்கும் அடிச் சறுக்கும், நுணலும் தன் வாயால் கெடும் என்பன போன்ற பழமொழிகள் உயிரினங்களின் முக்கியத்துவத்தை விளக்குவதாக அமைந்திருக்கின்றன.
கிளிப்பிள்ளை, கீரிப்பிள்ளை, வாழைக்கன்று என உயிரினங்கள் பற்றிய செய்திகள் மொழி மூலமாக சொல்லப்படுகிறபோது தாவரங்களும், உயிரினங்களும் பாதுகாக்கப்படுகின்றன என்றார்.
கருத்தரங்க தொடக்க விழாவுக்கு கல்லூரியின் தலைவர் பேராயர் டி.சந்திரசேகரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டி.பால் தயாமாறன், சுற்றுச்சூழல் துறையின் தலைவர் ஏ.அழகப்பா மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் துறை இணைப் பேராசிரியர் சி.ரவிச்சந்திரன் வரவேற்றார். மும்பையை சேர்ந்த சுற்றுச்சூழல் துறை விஞ்ஞானியும்,தேசிய திடக்கழிவு மேலாண்மை கூட்டமைப்பின் நிறுவனருமான அமியகுமார் சாகு கருத்தரங்க மலரை வெளியிட்டு பேசினார். பின்னர் கல்லூரியின் சுற்றுச்சுழல் துறையும், திடக்கழிவு மேலாண்மை கூட்டமைப்பும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கல்லூரியில் இந்த ஆண்டு முதல் திடக்கழிவு மேலாண்மை பட்டயப்படிப்பும் தொடங்க இருப்பதாக கல்லூரி முதல்வர் டி.பால் தயாபரன் தெரிவித்தார். கருத்தரங்கில் கொல்கத்தா கல்லூரி பேராசிரியர் எஸ்.சேவியர், புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக டீன் ஏ.எல்.ராமநாதன், தமிழ்நாடு சுற்றுச்சுழல் துறையின் முன்னாள் இயக்குநர் தி.சேகர், பேருராட்சிகளுக்கான இணை இயக்குநர் எஸ்.எம்.மலையமான் திருமுடிக்கரை,கொல்கத்தா கல்லூரி பேராசிரியர் ரானா சென் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.