தீக்குளித்த மனைவி சாவு;கணவர் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 24th March 2019 03:04 AM | Last Updated : 24th March 2019 03:04 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகேசன் (40). இவரது மனைவி சுமதி (35). இந்நிலையில் கடந்த மார்ச் 17-ல் வீட்டில் தனியாக இருந்த சுமதி மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். அப்போது அவரது அலறல் கேட்டு வெளியே நின்றுகொண்டிருந்த முருகேசன் மற்றும் மகன் ஆகிய இருவரும் சுமதியை காப்பாற்ற முயன்று தீக் காயமடைந்தனராம்.
இதையடுத்து சுமதி தனியார் மருத்துவமனையிலும், முருகேசன், அவரது மகன் மற்றொரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் சுமதி செவ்வாய்கிழமை உயிரிழந்து விட்டதாகவும், உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாம்.
இதையடுத்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுமதியை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் சுமதி உயிரோடு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் சுமதிக்கு அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தனியார் மருத்துவமனை தங்களை ஏமாற்றி பணம் பறித்ததாகக் கூறி உறவினர்கள் குறிப்பிட்ட மருத்துவமனையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை போலீஸார் உறவினர்களை சமரசம் செய்து வழக்கு பதிந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை விடியற்காலை சுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த முருகேசன், சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனையின் 2-ஆவது மாடியிலிருந்து கீழே குதித்ததில் லேசான காயங்களுடன் தப்பினார். இதையடுத்து தனியார் மருத்துவமனை அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க மறுத்ததையடுத்து முருகேசன் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.