ஆயுதப்படைக் காவலர் மனைவி தற்கொலை முயற்சி
By DIN | Published On : 01st May 2019 08:21 AM | Last Updated : 01st May 2019 08:21 AM | அ+அ அ- |

திருச்சியில் தனிக்குடித்தனம் நடத்த கணவர் வர மறுத்ததால், விரக்தியடைந்த ஆயுதப்படை காவலரின் மனைவி கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
திருச்சி மாநகர ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருபவர் கு. ஜேம்ஸ் பாண்டியன் (27). இவரது மனைவி பிரபா (24). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்த இவர்களுக்கு குழந்தை இல்லை.
திருச்சி கே.கே.நகர் பழனிநகர்ப் பகுதியிலுள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சுப்பிரமணியபுரத்தில் தனது பாட்டி வீட்டுக்கு அருகில் தனிக்குடித்தனம் செல்லலாம் என கணவர் ஜேம்ஸ் பாண்டியனிடம் பிரபா வலியுறுத்தி வந்தாராம்.
இதற்கு ஜேம்ஸ் மறுத்து வந்த நிலையில், இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த பிரபா, திங்கள்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கையை கத்தியால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்த தகவலறிந்த ஜேம்ஸ், மனைவி பிரபாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். கே.கே.நகர் போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.