300 வீரர்கள் 12 மணிநேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனை

கின்னஸ் சாதனைக்கான முயற்சியாக திருச்சியில் 300 வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து 12 மணிநேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனையை நிகழ்த்தினர்.

கின்னஸ் சாதனைக்கான முயற்சியாக திருச்சியில் 300 வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து 12 மணிநேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனையை நிகழ்த்தினர்.
திருச்சி சுருளி ஆண்டவர் தற்காப்பு கலைக்கூடத்தின் சார்பில், கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வை  மருத்துவர் ஆர். கிருஷ்ணன், ஜெர்மக்ஸ் லைப் சயின்ஸ் நிறுவன இயக்குநர் எல். நந்தகோபால் தொடக்கி வைத்தனர்.
இதன் ஒரு பகுதியாக உறையூரைச் சேர்ந்த 10 வயது மாணவி எம்.பி. சுகித்தா, தொடர்ந்து 3 மணிநேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனையைப் படைத்தார். 
இதுபோல, 8ஆம் வகுப்பு மாணவி யோகேசுவரி, பிரளை பிரிவான பல்டி  அடித்துக் கொண்டே சிலம்பம் சுற்றுதல் பிரிவில் தொடர்ந்து ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனை நிகழ்த்தினார்.
திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  1ஆம் வகுப்பு முதல் கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமார் 300 பேர்  சிலம்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த 300 வீரர், வீராங்கனைகளும் இடைவிடாது 12 மணிநேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனையை நிகழ்த்தினர்.
 சாதனைகளை நிகழ்த்திய வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளிக் குழுத் தலைவர் வி.ஜெ. செந்தில், மருத்துவர் வி. ஜெயபால், கிராம விடியல் நிறுவன பொது மேலாளர் ரத்தினகுமார் கந்தசாமி, இணைப் பேராசிரியர் என். மாணிக்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 
 போட்டி குறித்து பயிற்சியாளர் இரா. அரவிந்த் கூறுகையில்,  கின்னஸ் சாதனை முயற்சியின் முன்னோட்டமாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜீனியஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், பாரத் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஒண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகளின் சார்பில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கின்னஸ் சாதனைக்கு வீரர், வீராங்கனைகளைத் தயார்படுத்தவுள்ளோம் என்றார் .
 இதற்கான ஏற்பாடுகளை, எய்ம் டூ ஹை அறக்கட்டளை நிறுவனர் ஆர். மோகன், செயலர் எஸ். சிவா ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com