"கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை'
By DIN | Published On : 15th May 2019 08:22 AM | Last Updated : 15th May 2019 08:22 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி, மணப்பாறை, துறையூர், துவாக்குடி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள், 404 கிராம ஊராட்சிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு தினந்தோறும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, அனைத்து உள்ளாட்சி அமைப்புப் பகுதிகளிலும் போதிய அளவு தண்ணீர் வழங்க அந்தந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர்வடிகால் வாரியச் செயற்பொறியாளர், திருச்சி மாநகராட்சி ஆணையர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், நகராட்சி ஆணையர்கள் தினந்தோறும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று குடிநீர் இணைப்புகளை பெற்றுள்ளனரா, அனுமதியின்றி முறைகேடாக இணைப்புகளை பெற்றுள்ளனரா என்பதை சோதனையிடுவதுடன், மோட்டார் பம்ப் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக குடிநீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்மோட்டார் பழுது ஏற்பட்டாலோ, குடிநீர்க் குழாய் பழுது ஏற்பட்டாலோ போர்க்கால அடிப்படையில் பழுது பணிகளை முடிக்க வேண்டும்.
குடிநீர்த் தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். கோடையில் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான இடங்களில் ஆழ்துளைக்
கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேவை ஏற்பட்டால் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் எந்தப் பகுதியிலாவது குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டாலோ, குடிநீர் விநியோகம் தொடர்பாக ஆலோசனையோ, கருத்துக்களையோ பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால் ஆட்சியரகத்தில் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அலுவலகத்தை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். இல்லையெனில், 0431-2418995 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்
என்றார் ஆட்சியர்.