"மாற்றுத் திறனாளிகளும் ஐஏஎஸ் தேர்வில் சாதிக்கலாம்'

மாற்றுத் திறனாளிகளாலும் ஐஏஎஸ் தேர்வில் சாதிக்க முடியும் என்றார் பார்வைத் திறன் குறைபாடுடன் படித்து ஐஎப்எஸ் அதிகாரியான பெனோ ஜெபின்.

மாற்றுத் திறனாளிகளாலும் ஐஏஎஸ் தேர்வில் சாதிக்க முடியும் என்றார் பார்வைத் திறன் குறைபாடுடன் படித்து ஐஎப்எஸ் அதிகாரியான பெனோ ஜெபின்.
திருச்சியில் உள்ள கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெறுதல் குறித்த வழிகாட்டிக் கருத்தரங்கில் பெனோ ஜெபின் மேலும் பேசியது:
இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை எதிர்கொள்வதில் தயக்கம் இருத்தல் கூடாது. குறிப்பாக பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தங்களால் முடியாது என்ற அவநம்பிக்கை கூடாது. பார்வையில்லாவிட்டாலும் முறையாகத் திட்டமிட்டு படித்தால் சாதிக்க முடியும் என்பதற்கு நானே உதாரணம். தேர்வில் சாதிக்க ஊனம் தடையில்லை. மனதில் நம்பிக்கை அவசியம். தேர்வுக்குத் திட்டமிடுதலும், நேர மேலாண்மையும் மிக அவசியம்.
தேர்வுக்குத் தயாராவோர் அவசியம் செய்தித் தாள்களை படிக்க வேண்டும். செய்திகளைப் படிப்பதைவிட அதில் உள்ள நுணக்கங்களை அறிந்து கொள்ள வேண்டும். 
ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகும் வானொலி செய்திகளை கேட்டு ஆங்கில ஆற்றலை வளர்த்துக் கொள்ளலாம். முந்தைய தேர்வுகளில் இடம்பெற்ற கேள்விகள், அதன் வகைகள் அதற்கான பதில்களை தெளிவாக ஆராய்ந்து படிக்க வேண்டும். முதல் நிலைத் தேர்வில் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்க வேண்டும். தவறான பதில்களை தவிர்க்கும் வகையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு முந்தைய தேர்வுகளின் கேள்வித் தாள்களை படிப்பது நல்லது. சரியான பதில்களை எழுதுவதைவிட திட்டமிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வில் அச்சமின்றிப் பங்கேற்க வேண்டும். சரளமாகப் பேச வேண்டும். திட்டமிடுதல், நேர மேலாண்மை, புத்தகங்களை தேர்வு செய்தல் ஆகிய மூன்றும் வெற்றிக்கு அழைத்துச் செல்லும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. அனைவராலும் சாதிக்க முடியும். பெற்றோர்களும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். கல்லூரிகளில் படித்துக் கொண்டே தேர்வுக்கு தயாராகலாம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பெனோ ஜெபினின் கணவர் கிளமெண்ட், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் திருச்சி கிளை இயக்குநர் சுதா, இணை இயக்குநர் பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் குணா ஆகியோர் வாழ்த்தினர். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com