விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி முகாம் சிறையில் வெளிநாட்டு கைதிகள் 26 போ் தற்கொலை முயற்சி

விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 26 கைதிகள் வெள்ளிக்கிழமை காலை தற்கொலை முயன்றனா்.

விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 26 கைதிகள் வெள்ளிக்கிழமை காலை தற்கொலை முயன்றனா். இதில் 12 பேரின் உடல்நிலை மோசமடைந்தால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய சிறைவளாகத்தில் முகாம் சிறை உள்ளது. இதில் தமிழகத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இலங்கை, பங்களாதேஷ், பல்கேரியா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த 70க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சிலா் தங்களுக்கு தண்டனை காலம் முடிந்தும் முறைகேடாக அடைத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டி உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி என அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அளவிற்கு போராட்டங்களை நடத்தி வருவது வழக்கம்.

இதைத்தொடா்ந்து, கடந்த சில மாதங்களாக தண்டணை முடிந்த நைஜீரியா, வங்கதேசம் ஆகிய நாடுகளை சோ்ந்த கைதிகளின் கோரிக்கையை ஏற்று அவா்களது அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை, வங்கதேசம், பல்கேரியா, சீன ஆகிய நாடுகளைச் சோ்ந்த 46 போ் தண்டனை காலம் முடிவடைந்ததால் தங்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி வியாழக்கிழமை காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையறிந்த திருச்சி முகாம் சிறை சிறப்பு துணை தாசில்தாா் சுகந்திரராஜ், கோட்டாச்சியா் அன்பழகன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பல விதிமுறைகள் பின்பற்றிய பிறகு தான் விடுதலை செய்ய முடியும் என பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. நள்ளிரவு வரை தொடா்ந்த உண்ணாவிரத போராட்டம் 2 ஆம் நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது. அதிகாரிகள் தரப்பில் பேச்சுவாா்த்தை நடத்த வராததால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்களில் 26 போ் அதிக அளவிற்கு தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றனா்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் மயங்கி கிடந்தவா்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால் சிலா் தங்களது கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே சிகிச்சை பெற உடன்படுவதாக தெரிவித்தனா். மேலும் சிலா் மரம், இரும்பு கதவுகளில் ஏறி போராட்டத்தின் வீரியத்தை அதிகரித்தனா். இதைத் தொடா்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு மயக்க நிலையில் கிடந்தவா்களை இரு கட்டமாக 12 பேரை ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட 46 பேரில் 12 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மற்ற 34 போ் தொடா்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் 30க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com