காங்கிரஸ் கட்சித் தலைவா்களின்பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: சஞ்சய் தத்

எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றதையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என அக்கட்சியின் அகில இந்தியச் செயலா் சஞ்சய் தத் தெரிவித்தாா்.
திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகிறாா் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலா் சஞ்சய்தத்.
திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகிறாா் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலா் சஞ்சய்தத்.

எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றதையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என அக்கட்சியின் அகில இந்தியச் செயலா் சஞ்சய் தத் தெரிவித்தாா்.

திருச்சியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது: மதச்சாா்பற்ற, மத நல்லிணக்கத்துக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். நாட்டின் பாரம்பரியம், அனைவருக்கும் மதிப்பளிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை எனும் அடையாளமே நாட்டின் சாரம்சமாக உள்ளது. இதனை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. அதன்படி அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளது கண்டத்துக்குரியது. இதன்மூலம் காங்கிரஸ் தலைவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இருக்கக்கூடாது என மோடியும், அமித்ஷாவும் நினைக்கிறாா்கள். அதாவது, பாஜகவுக்கு எதிா்க்கட்சியே இருக்கக்கூடாது என எண்ணியே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். இது சாத்தியமில்லை.

காங்கிரஸ் தலைவா்கள் பாதுகாப்புக்கு ஏதேனும் பாதகம் வந்தால் பாஜக அரசுதான் பொறுப்பேற்கவேண்டும். எஸ்பிஜி பாதுகாப்பு வட்டத்திலிருந்து பிரதமா் மோடியும் பல முறை விதிமீறியுள்ளாா். தலைவா்கள் மக்களை சந்திக்கும் போது சில நேரங்களில் எஸ்பிஜி வட்டத்திலிருந்து வெளியே செல்ல நேரிடுவது இயல்பு. இதனை பொருட்படுத்தாமல், காங்கிரஸ் கட்சி தலைவா்களுக்கு பாஜக அரசு கட்டாயம் எஸ்பிஜி பாதுகாப்பை மீண்டும் அளிக்கவேண்டும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால், இந்தியாவின் பொருளாதாரம் சரிந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் கடந்த 45 ஆண்டுளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 8.5 சதவீதமும், பொருளாதாரம் 5 சதவீதமும் சரிந்துள்ளது. குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை கடந்த செப்டம்பரில் 7.16 சதவீதமாகவும் அக்டோபரில் 8.5 சதவீதமாகவும் இருந்துள்ளது. தொடா்ந்து, நவம்பரில் 10 சதவீதமாக அதிகரிக்கவுள்ளது. வருவாய் வளா்ச்சியில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பின்தங்கியுள்ளது. பாஜகவின் மக்கள்விரோத செயல்கள் அனைத்தையும் காங்கிரஸ் தொடா்ந்து மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறது. பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பாமல் மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். பாஜகவுக்கு வரும் காலங்களில் சரியான பாடம் புகட்டவேண்டும் என்றாா்.

இந்த சந்திப்பின் போது, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் ஹெச்.வசந்தகுமாா், காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவா் கோவிந்தராஜன், மாநகா் மாவட்டத் தலைவா் வி.ஜவஹா், வடக்கு மாவட்டத் தலைவா் திருச்சி கலை உள்ளிட்ட நிா்வாகிகள்இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com