நகைக் கடைகளில் கொள்ளையடிக்க நோட்டமிட்ட 5 வட மாநிலத்தவர் கைது

திருச்சி நகைக்கடைகளில் கொள்ளையடிக்க இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
நகைக் கடைகளில் கொள்ளையடிக்க நோட்டமிட்ட 5 வட மாநிலத்தவர் கைது


திருச்சி நகைக்கடைகளில் கொள்ளையடிக்க இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருச்சியில் பிரபல நகைக் கடையில் ரூ. 13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து மாநகர, மாவட்டப் பகுதிகளில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில், திருச்சி மாநகர பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டப்பட்டு, மதுரைவீரன் கோயில் தெரு, மொரைஸ் கார்டன் பகுதியில் உதவி ஆய்வர் உள்பட போலீஸார் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முகத்தை துணியால் மூடியவாறு நின்று கொண்டிருந்த 5 பேர் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து பொன்மலை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். 
விசாரணையில், அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷமீர் ஷேக் (27), ஜியா உல் ஷேக் (35), முகமது காலிக் ஷேக் (45), ஷபிகுல் ஷேக் (29), நஜ்ரீக் ஷேக் (45) என்பது தெரியவந்தது. தீவிர விசாரணையில் அவர்கள் மீது கேரளம், புதுதில்லி, மும்பை, ஒடிசா, புவனேஸ்வர் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு குற்றவழக்குகள் உள்ளது தெரியவந்தது. 
அவர்கள் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தங்கி அந்தந்த பகுதிகளில் உள்ள நகைக் கடைகளை கூட்டுக் கொள்ளையடிக்க நோட்டம் பார்த்துள்ளனர். மேலும், காங்கேயத்தில் உள்ள நகைக் கடையை கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்டவர்கள் திருச்சியில் கூட்டுக் கொள்ளைக்கான முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். இதற்காக, கடப்பாறை, திருப்புலி, கத்தி, சுத்தியல், கயிறு, மிளகாய்பொடி பொட்டலங்களைத் தயார்நிலையில் வைத்திருந்ததை போலீஸார் கைப்பற்றினர். 
அதோடு, பிடிபட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். திருச்சி பிரபல நகைக்கடையில் அரங்கேறிய திருட்டு சம்பவத்தை அடுத்து சில நாள்களிலேயே நகைக் கடைகளில் கொள்ளையடிக்க இருந்தவர்கள் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com