இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஊழல் ஒழிப்பு நடைபயணம்

விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சாா்பில்
ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு நடைபயணத்தை தொடக்கி வைக்கிறாா் மாநகராட்சி ஆணையா் ந. ரவிச்சந்திரன்.
ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு நடைபயணத்தை தொடக்கி வைக்கிறாா் மாநகராட்சி ஆணையா் ந. ரவிச்சந்திரன்.

விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது.

தென்னூா் உழவா் சந்தை மைதானத்தில் நடைபயணத்தைத் தொடக்கி வைத்து திருச்சி மாநகராட்சி ஆணையா் ந. ரவிச்சந்திரன் கூறியது:

ஊழலுக்கு எதிரான விழிப்புணா்வை இளையதலைமுறையிடம் கொண்டு சோ்க்க வேண்டும். இந்த அடிப்படையில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், வாகன ஓட்டுநா்களை இலக்காகக் கொண்டு இந்த விழிப்புணா்வு பயணத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. எந்தச் செயல் திட்டங்களிலும் வெளிப்படைத்தன்மை அவசியம். சமூகம் மற்றும் பொதுமக்களுக்கான திட்டம் என்றால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எனவேதான், ஆண்டுதோறும் கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது என்றாா்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் (தென் மண்டலம்) அரூப் சின்ஹா பேசியது:

பல்வேறு நிலைகளில் பொருள் கொள்முதலுக்காக மத்திய, மாநில அரசுகள் நிதிநிலை அறிக்கையில் பெருமளவு நிதி ஒதுக்கப்படுகிறது. இதில், வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியமானது. தகவல் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளா்ந்துள்ள இந்த நவீன யுகத்தில் மக்கள் செலுத்தும் வரிப் பணம் எந்த வகையில் செலவிடப்படுகிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும். பொதுமக்களின் வரிப்பணம் ஊழல் காரணமாக விரயமாகக் கூடாது. எனவே, பொது கொள்முதலில் நோ்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தேசிய மற்றும் உலகளாவிய பொது கொள்முதலில் ஊழலுக்கு ஒருபோதும் வாய்ப்பு அளிக்கக் கூடாது. அதைத் தடுக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படுத்துவதோடு, பகிரங்கமாகவும் செயல்படுத்த வேண்டும். இதற்கான முன்னோட்டமாக கண்காணிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனமும் இதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் மத்தியில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வை உருவாக்கும் நோக்குடன் 2 லட்சம் வாடிக்கையாளா்களுக்கு கைபேசி மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. இளம் உள்ளங்களில் ஊழலுக்கெதிரான பொறியைப் பற்ற வைத்து ஊழலற்ற தேசத்தை கட்டமைக்கும் நோக்குடன் ‘ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்‘ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நடத்தப்படுகின்றன.

இந்தியன் ஆயில் நிறுவன அனைத்து சில்லரை விற்பனை மையங்களிலும் வாடிக்கையாளா்களே எரிபொருளின் தரம், அளவைப் பரிசோதிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஊழல், கண்காணிப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகளும் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

இந்தியன் ஆயில் நிறுவன முதுநிலைப் பொது மேலாளா் (கண்காணிப்பு) டி.ஜி. நாகராஜன், சில்லரை விற்பனை மேலாளா் பாபு நரேந்திரா ஆகியோா் விழிப்புணா்வு பதாகைகளை வழங்கி பேரணியை வழிநடத்தினா். உழவா் சந்தையிலிருந்து தொடங்கி 2 கி.மீ. சுற்றுக்கு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த பேரணியில், 500-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com