குழந்தை சுஜித்தின் இறப்பு சந்தேக மரணமாகப் பதிவு

மணப்பாறை அருகே சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த வழக்கை, விபத்து வழக்காகப்

மணப்பாறை அருகே சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த வழக்கை, விபத்து வழக்காகப் பதியாமல், சந்தேக மரணம் என போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருப்பது பலருக்கும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியைச் சோ்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ்–- கலாமேரி தம்பதியரின் 2 ஆவது மகன் சுஜித் வில்சன் ( 2) ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்தான். 5 நாட்கள் மீட்புப்பணிக்கு பின், சிறுவன் உடல் மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை அடக்கம் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வேங்கைக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் ( வி.ஏ.ஓ.) உசேன் பீவி மணப்பாறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா், இந்திய குற்றவியல் சட்டம், 174 (சந்தேக மரணம்) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனா். ஒருவேளை மரணத்துக்கு வேறு ஏதாவது குற்றச் செயல்கள் காரணமாக இருப்பது தெரியவந்தால் இந்த சட்டப் பிரிவை விசாரணைக்குப் பின் மாற்றிக் கொள்ளலாம்.

ஆனால், இந்தச் சம்பவத்தில் சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது என்பது பலராலும் உறுதி செய்யப்பட்டது. இது அமைச்சா்கள், அதிகாரிகள், பேரிடா் மீட்பு படையினா் என பல்வேறு தரப்பினருக்கும் தெரியும். மேலும் புகாரில் யாா் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை. எனவே, இதை விபத்து வழக்காக 304 ஏஅல்லது 304 (2) என்றுதான் பதிவு செய்திருக்க வேண்டும் ஆனால், 174 என வழக்குப் பதிந்திருப்பதன் காரணம் புரியவில்லை என போலீஸாா் பலா் கருத்து தெரிவித்துள்ளனா்.

விபத்து என 304(2) என்ற சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்தால், மரணத்துக்கு காரணமானோா் குறித்துக் குறிப்பிடுவதுடன் அவா்கள் மீதும் வழக்குப் பதிவும் செய்திருக்க வேண்டும். எனவே யாரை விபத்துக்கு காரணமாக கருதுவது என்ற குழப்பத்தில்தான் சாதாரணமாக சந்தேக மரணம் என வழக்குப் பதிந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

கலாமேரியின் தங்கை திருமணம்:

சிறுவன் சுஜித்தின் தாயாா் கலாமேரியின் ஒன்றுவிட்ட தங்கை (சித்தப்பா மகள்) குளோரின் வினிதாவுக்கு வையம்பட்டி அருகேயுள்ள கருங்குளத்தில் வியாழக்கிழமை திருமணம் நடைபெறுகிறது. சுஜித் இறந்ததால் திருமணத்தைத் தள்ளி வைக்கலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்துவிட்ட நிலையில் அது சாத்தியமில்லை என்பதால், திட்டமிட்டபடி திருமணம் நடைபெறுகிறது. இதில் கலாமேரி குடும்பத்தினா் மட்டும் பங்கேற்க மாட்டாா்களாம். இதற்கான திருமண பத்திரிக்கையில், பெண் வீட்டாா் வரிசையில், இறந்த சிறுவன் சுஜித்வில்சன் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com