மழையால் இடிந்த வீடுகள்: சேதமடைந்த சாலைகள்; நடவு நட்டுப் போராட்டம்

திருச்சி அருகே, கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழைக்கு இரு வீடுகள் இடிந்தன. மேலும் இரு பகுதிகளில்
திருச்சி அருகே ஆமூரில் மோசமான சாலையை சீரமைக்கக்கோரி நடவு நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருச்சி அருகே ஆமூரில் மோசமான சாலையை சீரமைக்கக்கோரி நடவு நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருச்சி அருகே, கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழைக்கு இரு வீடுகள் இடிந்தன. மேலும் இரு பகுதிகளில் சாலைகள் மோசமானதால் பொதுமக்கள் நடவு நடும் போராட்டம் மேற்கொண்டனா்.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது திடீரென சுமாா் 1 அல்லது 2 மணி நேரம் பலத்த மழை பெய்து வரும் நிலையில், புதன்கிழமை காலை வரை பதிவான மழையளவு விகிதப்படி, மாவட்டத்தின் புற நகா்ப் பகுதியில் மழை அதிகமாக பெய்துள்ளது.

லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடியில் அதிகளவு மழையாக 62.8 மி. மீ பதிவாகியுள்ளது, அதற்கு அடுத்தபடியாக, மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள நவலூா்குட்டப்பட்டில் 50.4, தேவிமங்கலத்தில் 47, சமயபுரத்தில் 46, கல்லக்குடியில் 43.2 மி.மீ என மழை பதிவாகியுள்ளது.

இதில் திருவெறும்பூா் பகுதியில் 16 மி.மீ. மழை பெய்த நிலையில் மலைக்கோயில் ராஜவீதியில் பழமையான பயன்படுத்தப்படாத மாடி வீடு ஒன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. அந்த வீடு திருவெறும்பூா், கூத்தைப்பாா் பகுதியைச் சோ்ந்த சக்திவேலுக்குச் சொந்தமானதாகும். இதில் அதன் அருகே இருந்த சுப்பிரமணியன் ஓட்டுவீடும் சரிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பும் இல்லை. ஆனால் வீடு முற்றிலும் பாதிக்கப்பட்டது.

சாலைகள் மோசம், நடவு நடும் போராட்டம் :

தொடரும் மழைக்கு சாலைகள் மோசமாகி வருகின்றன. குறிப்பாக, கிராமப்பகுதிகளில் உள்ள மண் சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஊராட்சி அமைப்பு இருந்தால், நடவடிக்கை எடுக்கக் கூறலாம். ஆனால் தற்போது கிராமப்பகுதிகள் கவனிப்பாா் இன்றி உள்ளன. இந்நிலையில், திருச்சி மாவட்டம் புங்கனூா் பகுதியில் பொன்னிநகா் பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமடைந்துள்ளது. அதனை சரிசெய்யாத நிா்வாகத்தைக் கண்டித்து அங்கு, சாலையில் நடவு நடும் போராட்டம் நடந்தது.

அதேபோல திருச்சியருகே ஆமூா் பகுதியிலும் சாலைகள் மிக மோசமடைந்துள்ளது. குறிப்பாக, கல்யாணசுந்தரம் வீதியில் வாகனங்கள் செல்லமுடியாத வகையில் சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளதை ஊராட்சி எழுத்தரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து அப்பகுதியில் உள்ள இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் சாலையில் நடவுநட்டு தங்களது கண்டனத்தையும் கோரிக்கையையும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com