திடக் கழிவு, திரவக் கழிவு மேலாண்மையில் திருச்சி முதலிடம்

திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மையில் திருச்சி மாநகராட்சி முன்னோடியாக விளங்குவதாக மாநகரப் பொறியாளர் சி. அமுதவள்ளி


திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மையில் திருச்சி மாநகராட்சி முன்னோடியாக விளங்குவதாக மாநகரப் பொறியாளர் சி. அமுதவள்ளி தெரிவித்தார்.
மனித குடியிருப்புகளுக்கான இந்திய நிறுவனம் (ஐஐஹெச்எஸ்) சார்பில், திருச்சி மாநகரம் முழுவதையும் உள்ளடக்கிய சுகாதாரம் (சிடபிள்யூஐஎஸ்) திட்டத்தின் கீழ், மாநகராட்சியில் பணிபுரியும் சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்களுக்கான பயிற்சி கருத்தரங்கம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து மாநகரப் பொறியாளர் சி. அமுதவள்ளி பேசியது:
தூய்மை நகரங்கள், பொலிவுறு நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள திருச்சி மாநகராட்சியானது தொடர்ந்து அந்த இடத்தை தக்கவைக்க பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்திவருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளை ஆராய்ந்தே முன்பு தூய்மை நகரங்களுக்கான மதிப்பீட்டை மத்திய அரசு வழங்கிவந்தது. இப்போது, திரவக் கழிவு மேலாண்மைக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுவதால் திரவக்கழிவு மேலாண்மையிலும் திருச்சி மாநகராட்சி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மனிதக்கழிவுகள் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 
முதல்கட்டமாக திருச்சி மாநகரில் திறந்தவெளி மலம் கழித்தல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக தனிநபர் கழிப்பறை அனைத்து வீடுகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. நீர் நிலைகளிலோ, திறந்த வெளிகளிலோ திரவக் கழிவுகளை கொட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
          தனிபர் கழிப்பறை முறையாக கட்டமைக்கப்பட வேண்டும். கழிப்பறைக்கு அருகே ஆழ்துளை குடிநீர் குழாய் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், கழிவுநீர் சேகரிப்புத்தொட்டி அமைக்கும் இடத்திலும் கவனம் வேண்டும். திறந்தவெளியில் மலக்கழிவுகளோ, திரவக் கழிவுகளோ இருந்தால் கொசு, ஈக்கள் பெருகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, திரவக் கழிவு மேலாண்மையிலும் திருச்சி மாநகராட்சி முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறது. குழுமணி பகுதியில் திரவக் கழிவுகளை சுத்திகரித்து அப்புறப்படுத்தும் நிலையம் கட்டப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com