திருச்சி மாநகரில் 250 டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திருச்சி மாநகரில் இடம்பெற்றிருந்த 250-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பேனர்கள் சனிக்கிழமை உடனடியாக அகற்றப்பட்டன.


சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திருச்சி மாநகரில் இடம்பெற்றிருந்த 250-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பேனர்கள் சனிக்கிழமை உடனடியாக அகற்றப்பட்டன.
சென்னையில் சாலையின் நடுவே தடுப்புச்சுவரில் வைத்திருந்த டிஜிட்டர் பேனர் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ மீது விழுந்து நிலைதடுமாறிய அவர் மீது லாரி ஏறியதில் உயிரிழந்தார். 
இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு விளக்கம் கேட்டுள்ளது. 
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதன்படி, திருச்சி மாநகரப் பகுதிகளில் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட 4 கோட்டங்களிலும் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதன்படி, திருவரங்கம், கோ. அபிஷேகபுரம், பொன்மலை, அரியமங்கலம் ஆகிய 4 கோட்டங்களிலும் உள்ள மாநகராட்சிப் பணியாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பேனர்களை அகற்றும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம், தென்னூர் உழவர் சந்தை, நீதிமன்றப் பகுதி, புத்தூர், உறையூர், சத்திரம் பேருந்துநிலையம், திருவெறும்பூர், கருமண்டபம், அம்மா மண்டபம், திருவானைக்கா, பால் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்சிகள், வணிக நிறுவனங்கள், அமைப்புகள், திருமண விழா, கோயில் விழா குறித்த பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. 
திருவரங்கம் கோட்டத்தில் 60, கோ- அபிஷேகபுரம் கோட்டத்தில் 43, பொன்மலை கோட்டத்தில் 54, அரியமங்கலம் கோட்டத்தில் 113 என 250-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பேனர்கள், கட்-அவுட்கள் சனிக்கிழமை ஒரே நாளில் அகற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com