பெரியார் கல்லூரியில் பயின்ற 95% மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்

பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் பயின்ற 95 சதவீத மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா


திருச்சி: பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் பயின்ற 95 சதவீத மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா ஞாயிற்றுக்கிழமை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தக் கல்லூரியில் தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாள், மணியம்மையார் மகளிர் ஓய்வகம் திறப்பு, முன்னாள் மாணவர்கள் சங்கமம் ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர் பேசியது:

முதுமை, நோய், மரணம் இம்மூன்றும் தவிர்க்க முடியாதவை. அதன்படி, ஆண்டுதோறும் நடைபெறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் போது நம்மோடு பயின்ற நண்பர்கள் சிலரை இழக்க நேரிடுகிறது.

கல்லூரி நினைவலைகள் என்பது பசுமரத்தாணி போன்றது. கல்லூரியில் பயின்ற அனுபவங்களை அதன் நண்பர்களோடு எத்தனை முறை பகிர்ந்தாலும் சலிப்பதில்லை. வாழ்விலும் மறக்க இயலாது. கல்லூரியில் பயிலும் போது குறும்புத்தனம் இருக்கலாம். ஆனால், விஷமத்தனத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது.

நான் பயின்ற இக்கல்லூரிதான் நெஞ்சுக்கினியதாக உள்ளது. விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்து இக்கல்லூரி மீதான பார்வையை மாணவர்கள் தகர்த்தெறிந்துள்ளனர். இக்கல்லூரியை, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி கூடமாக விளங்கவேண்டும் என எண்ணியவர் பெரியார். அவரின் எண்ணம் போல் இக்கல்லூரியில் பயின்ற 95 சதவீத மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாகியுள்ளனர். 

எண்ணங்கள், நினைவுகள், உணர்வுகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தப்படவேண்டும். அதில் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு வாழ்விற்கு புத்தாக்கத்தை பெறவேண்டும் என்றார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி, இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்பு, கலந்துகொண்டோர் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. குறிப்பாக, சதுரங்கப் போட்டியில் உலக அளவில் பதக்கம் பெற்று வரும், திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெனித்தா ஆன்டோவுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com