மத்திய அரசு ஹிந்தியை திணிக்கவில்லை: வானதி சீனிவாசன்

மத்திய  அரசு எந்த இடத்திலும் ஹிந்தியை திணிக்கவில்லை என்றார் பாரதிய ஜனதா கட்சியின்  மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன்.

மத்திய  அரசு எந்த இடத்திலும் ஹிந்தியை திணிக்கவில்லை என்றார் பாரதிய ஜனதா கட்சியின்  மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன்.
திருச்சி உறையூரில் செவ்வாய்க்கிழமை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர்,செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மத்திய நிதியமைச்சரின் மிகப் பெரிய பொருளாதார நடவடிக்கையாக, உள்நாட்டு நிறுவனங்களுக்கான பெருநிறுவன வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி  வரியும் குறைந்துள்ளது.
இதன் காரணமாக பங்குச்சந்தை உயர்வடைந்துள்ள நிலையில் வேலைவாய்ப்பும் பெருகும்.  மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பாதிப்பை விரைந்து  சரி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு, மொத்தமாக 12 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளதால் சிறுதொழில் புத்துயிர் பெற்றுள்ளது. இதேபோன்று வெட்கிரைண்டர் உற்பத்தி மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொழில் ஆரோக்கிய சூழல் ஏற்பட்டுள்ளது. 
நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி எந்தவித முடிவும் எடுக்கவில்லை, கூடிய விரைவில் முடிவெடுப்பார்கள். 
பாஜக அரசும் , அமைச்சர்களும் எந்த இடத்திலும் ஹிந்தியை திணிக்கவில்லை. மும்மொழியில் ஹிந்தி இருப்பதை ஒரு சில கட்சியினர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர் என்றார் அவர்.
பேட்டியின்போது, மாவட்டத் தலைவர்கள் திருச்சி தங்க. ராஜய்யன், தஞ்சாவூர்  இளங்கோவன்,   மாவட்ட இளைஞரணித் தலைவர் கௌதம் நாகராஜன்,  மாவட்டச் செயலர்கள் காளீசுவரன், அரசு நேதாஜி, இணைக் கோட்டப் பொறுப்பாளர் கண்ணன், மாவட்டப் பொதுச் செயலர் எஸ்.பி. சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com