காந்தி மார்க்கெட் இடமாற்ற பிரச்னைக்கு விரைவில் தீர்வு

திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் குறித்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார் மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்.


திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் குறித்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார் மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்.
காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்வது குறித்து,  திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காந்தி மார்க்கெட் நிலை என்பது வேறு, தற்போதைய நிலை வேறு.  திருச்சி  நகராட்சியாக இருந்த போது இருந்த மக்கள் தொகையைக் காட்டிலும் பலமடங்கு இன்று அதிகரித்துவிட்டது. அதே போல போக்குவரத்து நெரிசலும்  பல மடங்கு அதிகரித்துவிட்டது. காந்திமார்க்கெட் பகுதிக்குள் சென்றுவிட்டு பொதுமக்கள்  வெளியே வரும் போது விழி பிதுங்கிதான் வெளியே வருகின்றனர். ஆம்புலன்ஸ் வண்டிகள் செல்லமுடியாத அளவுக்கு சாலைகளை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.
காந்திமார்க்கெட்டில்  வியாபாரிகள் தாங்கள் வியாபாரம் செய்யும் பொருள்களின் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டி  மாநகரின் மத்திய பகுதியில் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்குகின்றனர். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் சீர்மிகு நகரங்கள் திட்டத்தில் வளர்ச்சிப்  பணிகளை மேற்கொள்ள காந்திமார்க்கெட் இடமாற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
 எனவே கள்ளிக்குடி மார்க்கெட்டில் போதிய உள்கட்டமைப்பு , அடிப்படை வசதி, இடவசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு அரசு தயாராக  உள்ளது. அங்கு வாய்ப்பு இல்லையென்றால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெங்காய மண்டி அருகே 20 ஏக்கர் பரப்பளவில் தனியார் இடத்தில் மார்க்கெட் அமைப்பது என்றால் , அரசு  விதிகளுக்குள்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும். அதன் பிறகே தனியார் இடத்தில் காய்கறி மார்க்கெட் அமைப்பது குறித்து தெரியும். 
காந்திமார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்வது குறித்து வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று,முதல்வர் 6 மாதம் கால அவகாசம் அளித்தார். ஆனால் வியாபாரிகளிடையே முடிவு எட்டப்படாததால் அளிக்கப்பட்ட கால அவகாசத்தை கடந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. சீர்மிகு நகரங்கள் திட்டத்தை செயல்படுத்துவதில் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருவதால் காந்திமார்க்கெட் இடமாற்றம் குறித்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார் அவர். 
முன்னதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுச் செயலர் வீ.கோவிந்தராஜூலு, வணிகர் சங்கப் பேரவை  மாவட்டச் செயலர் எஸ்.பி.பாபு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். அப்போது பேசிய அனைத்து நிர்வாகிகளும் காந்திமார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்வதை ஒட்டு மொத்தமாக எதிர்த்தனர். 
கூட்டத்துக்கு ஆட்சியர் சு. சிவராசு தலைமை வகித்தார். அமைச்சர் எஸ்.வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் தா.சாந்தி, மாநகராட்சி நகரப் பொறியாளர் அமுதவள்ளி,  மாநகரக் காவல் துணை ஆணையர் ஆ.மயில்வாகனன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com