மகாளய அமாவாசை: காவிரியாற்றில் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம்

மகாளய அமாவாசையொட்டி,  திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றுப்  படித்துறையில் சனிக்கிழமை ஏராளமானோர் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மகாளய அமாவாசை: காவிரியாற்றில் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம்


மகாளய அமாவாசையொட்டி,  திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றுப்  படித்துறையில் சனிக்கிழமை ஏராளமானோர் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை பெரிய அமாவாசையாக கருதப்படுகிறது. குடும்பத்தில் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு இந்த நாளில் தர்ப்பணம் செய்வது வழக்கம். மகாளய அமாவாசையையொட்டி சனிக்கிழமை அதிகாலை முதல் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்று படித்துறைக்கு வந்த பொதுமக்கள் நீராடி,  இறந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.  வழக்கத்தை காட்டிலும் அதிகளவில் கூட்டம் காணப்பட்டதால் புரோகிதர்களும்  ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நபர்களை அமர செய்து தர்ப்பணத்தை நடத்தினர்.  தொடர்ந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.    
நிகழாண்டில் காவிரியாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால்  அம்மாமண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை உள்ளிட்டவற்றில்  போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், தீயணைப்பு வீரர்களும் மிதவைப் படகுகள் மூலமாக ஆற்றுக்குள் யாரும் இறங்கி விடாதவாறு கண்காணிப்புப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டனர்.
மகாளய அமாவாசையொட்டி தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சாலைப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதுபோல முசிறி காவிரியாற்றுப் படித்துறையிலும்  ஏராளமானோர் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
திருவையாறு...
 மகாளய அமாவாசையையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை புனித நீராடினர்.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மகாளய அமாவாசை விஷேசமாக கருதப்படுகிறது. இந்நிலையில், நிகழாண்டு புரட்டாசி சனிக்கிழமையன்று மகாளய அமாவாசை வந்ததால் மிகவும் விமரிசையாகப் பக்தர்கள் கருதினர். இந்த விஷேசமான நாள் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி, திருவையாறு காவிரிக் கரையில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. தற்போது, காவிரியில் இரு கரைகளையும் தொட்டவாறு நீரோட்டம் இருக்கிறது. இதன் காரணமாக மஹாளய அமாவாசையையொட்டி, திருவையாறு புஷ்ய மண்டபக் காவிரிப் படித்துறைக்கு செவ்வாய்க்கிழமை ஏராளமானோர் வந்தனர். மேலும், தங்களது முன்னோருக்குச் சிறப்புப் பூஜை செய்து வழிபட்டு, காவிரியில் புனித நீராடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com