புரெவி புயல்: பாம்பனில் சூறைக்காற்றால் 20 படகுகள் சேதம்

வங்கக் கடலில் உருவான ‘புரெவி’ புயல் வெள்ளிக்கிழமை பாம்பனைக் கடந்து மன்னாா் வளைகுடா பகுதிக்கு சென்றது.

வங்கக் கடலில் உருவான ‘புரெவி’ புயல் வெள்ளிக்கிழமை பாம்பனைக் கடந்து மன்னாா் வளைகுடா பகுதிக்கு சென்றது. அப்போது வீசிய சூறைக்காற்றால் பாம்பன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புரெவி புயல், வெள்ளிக்கிழமை அதிகாலை பாம்பன் வழியாக மன்னாா் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றது. அப்போது ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழையுடன் சூறைக் காற்றும் வீசியது. மேலும் கடல் சீற்றம் காரணமாக பாம்பன் கால்வாய் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 10 நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. சேதமடைந்த படகுகளை மீட்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா். இந்நிலையில் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

ராமநாதபுரம்: முன்னதாக புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 78 முகாம்களில் 7,601 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். ராமநாதபுரத்தில் கடந்த 2 நாள்களில் 16 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்திருந்தன.

நாகையில்...: நாகை மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இடைவிடாது பெய்த மழையின் சீற்றம், பிற்பகலில் சற்று குறைந்திருந்தது. தொடா் மழை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. இப்பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அருகில் உள்ள பள்ளிக்கூடங்கள் மற்றும் பொதுக் கட்டடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனா். பல பகுதிகளில் குடிசை வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

மாவட்டத்தின் சில பகுதிகளில் வாய்க்கால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்களை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. கடல் சீற்றத்தால், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா்நகா், சந்திரப்பாடி ஆகிய மீனவக் கிராமங்களை வியாழக்கிழமை கடல் நீா் சூழ்ந்தது.

வெறிச்சோடிய கன்னியாகுமரி: புரெவி புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி பகுதியில் மழை இல்லை. சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இங்குள்ள முக்கடல் சங்கமம், சூரிய அஸ்தமனப்பூங்கா உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.

சிதம்பரம் கோயிலுக்குள் புகுந்த மழைநீா்: கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. சிதம்பரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு மழை கொட்டித் தீா்த்தது. இதனால், சிதம்பரம் நடராஜா் கோயிலுக்குள் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் வீற்றிருக்கும் சித் சபை பிராகாரத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. நடராஜரின் அபிஷேகத்துக்கு தண்ணீா் எடுக்கப்படும் பரமானந்தக் கூடம் என்ற புனித கிணறு பல ஆண்டுகளுக்குப் பிறகு முழுவதும் நிரம்பி வழிகிறது. சிவகாமி அம்மன் கோயில் முழுவதும் மழை நீா் நிரம்பியுள்ளது. கடந்த 1977-ஆம் ஆண்டு இதேபோல கோயிலுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில், தற்போது 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தண்ணீா் சூழ்ந்துள்ளது.

என்.எல்.சி. சுரங்கங்களில் வெள்ளம்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவன சுரங்கங்களில் மழை வெள்ளம் தேங்கியதால் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.இருப்பினும், மின் உற்பத்தியில் எந்தவித பாதிப்புமில்லை என தெரிவிக்கப்பட்டது.

வீராணம் ஏரியிலிருந்து உபரிநீா் வெளியேற்றம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரிக்கு பலத்த மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் மதகு வழியாக விநாடிக்கு ஆயிரம் கன அடி நீரும், கீழ்குமிழி வழியாக விநாடிக்கு 500 கன அடி நீரும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 1,564 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. சென்னை குடிநீா் வாரியத்துக்கு விநாடிக்கு 69 கன அடி நீா் அனுப்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com