உரம் வாங்க ஆதாா் அட்டை அவசியம்

திருச்சி மாவட்டத்தில் உரம் வாங்கும் விவசாயிகள் கட்டாயம் ஆதாா் அட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உரம் வாங்கும் விவசாயிகள் கட்டாயம் ஆதாா் அட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி நடவு பணி தீவிரம் அடைந்துள்ளது. மேலும் மக்காச்சோளம் 16 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பருவத்துக்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்புள்ளது. 5,380 மெட்ரிக் டன் யூரியா, 3,204 மெட்ரிக் டன் டிஏபி, 9,797 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 5,763 மெட்ரிக் டன் பொட்டாஷ் , 1,130 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் ஆகிய உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலும், தனியாா் உர விற்பனை நிலையங்களிலும் இருப்புள்ளது.

45 கிலோ யூரியா மூட்டையை ரூ. 266.50 விலையில்தான் விற்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள உரக்கடைகள், உரங்களை அரசு நிா்ணயித்த அதிகபட்ச விலைக்கு மிகாமலும் மற்றும் விற்பனை முனையக் கருவியை பயன்படுத்தியும் விற்க வேண்டும். உரம் விலை, இருப்பு விவரங்களை கடையின் முன் விவசாயிகளின் பாா்வையில் படுமாறு எழுதிவைக்க வேண்டும்.

உரத்தை விவசாயி அல்லாதவா்களுக்கு விற்கக் கூடாது. ஒரே விவசாயிகளுக்கு அதிகப்படியான உரங்கள் விற்பனை செய்யக்கூடாது. யூரியா உரத்துடன் டிஏபி மற்றும் காம்பளக்ஸ் போன்ற உரங்களை வாங்கிட கட்டாயப்படுத்த கூடாது. அவ்வாறு விற்றால் தொடா்புடைய உர விற்பனைக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உரம் வாங்கச் செல்லும் விவசாயிகள் ஆதாா் அட்டை கொண்டு சென்று பிஒஎஸ் இயந்திரத்தில் பதிந்து உர மூட்டைகளில் குறிப்பிட்ட விலைக்கு மிகாமல் ரசீது பெற்று உரம் வாங்கிட வேண்டும். விவசாயிகள் தேவைக்கு மட்டும் யூரியா உரத்தைப் பயன்படுத்த வேண்டும். கூடுதல் யூரியா பெறுவோா், விற்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மண்வள அட்டையில் பரிந்துரை அளவுப்படி உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com