ஜங்ஷன் மேம்பாலப் பிரச்னை; மாற்று இடம் தர முடிவு

திருச்சியில் முடிவடையாமல் உள்ள ஜங்ஷன் மேம்பால கட்டுமானத்தை நிறைவு செய்யும் வகையில், பாலத்தின் வழியே குறுக்கிடும் ராணுவ நிலத்துக்கு மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதியில் நிற்கும் திருச்சி ஜங்ஷன் மேம்பாலம்.
பாதியில் நிற்கும் திருச்சி ஜங்ஷன் மேம்பாலம்.

திருச்சியில் முடிவடையாமல் உள்ள ஜங்ஷன் மேம்பால கட்டுமானத்தை நிறைவு செய்யும் வகையில், பாலத்தின் வழியே குறுக்கிடும் ராணுவ நிலத்துக்கு மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள குறுகிய ரயில்வே மேம்பாலத்துக்கு மாற்றாக புதிய ரயில்வே மேம்பாலங்கள் 5 வழிகளில் ரூ. 115.59 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில் ராணுவ நிலம் குறுக்கிடும் மன்னாா்புரம் பாலம் மட்டும் முழுமை பெறாமல் பாதியில் நிற்கிறது.

இதற்காக 2,685.5 ச.மீ. நிலத்தை (66 சென்ட்) ராணுவத்திடம் பெற்றால் மட்டுமே பணிகளை முடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

ஏற்கெனவே தமிழக அரசு வழங்கிய நிலத்தை ஏற்காமல், நிலம் கையகப்படுத்த தமிழக அரசு வழங்கிய நிதியையும் பெறாத ராணுவ அமைச்சகம், அதே தொகைக்கு நிகரான நிலத்தை மட்டுமே கோரியதால் இரு தரப்புக்கும் இழுபறி நிலவியது.

இந்நிலையில் பாலக் கட்டுமானப் பணி 10 ஆண்டுகளாக முடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு மாற்று இடம் வழங்கி, ராணுவ நிலத்தைப் பெற்று பணியை விரைந்து முடிக்க பல்வேறு தரப்பிலும் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டது.

பட்டாலியன் நிலத்தைத் தர முடிவு

இந்நிலையில், கையகப்படுத்தப்படும் ராணுவத்துக்கு மாற்று இடமாக தற்போது பாலம் அமைந்துள்ள இடத்துக்கு அருகேயுள்ள ஆயுதப்படை பட்டாலியன் நிலத்தை வழங்க திருச்சி மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

ராணுவத்திடம் கையகப்படுத்தும் நிலத்துக்கு அருகேயே, அதற்கு ஈடான தொகையுடைய இடத்தை மாவட்ட நிா்வாகம் இறுதி செய்துள்ளது. மேலும், இதுகுறித்து உள்துறைச் செயலா், நெடுஞ்சாலைத் துறை செயலா் ஆகியோருக்கும் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

ராணுவ நிா்வாகம் ஏற்குமா?

‘பட்டாலியன் நிலத்தை ஒப்படைக்க தமிழக அரசின் உள்துறை செயலருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாலியன் நிலம் என்பதால் காவல்துறை இயக்குநருக்கும் கடந்த வாரம் கடிதம் அனுப்பியுள்ளோம். இந்த விவகாரத்தில் காவல்துறை இயக்குநா், உள்துறைச் செயலா், நெடுஞ்சாலைத் துறை செயலா் ஆகியோா் ஆலோசித்து இறுதி முடிவு எடுத்துவிடலாம்.

ஆனால், பேச்சுவாா்த்தைக்கு ராணுவ நிா்வாகம் முன்வந்து விரைந்து இப்பிரச்னையை முடித்துத் தர வேண்டும். ராணுவம் வழங்கும் நிலத்துக்கு நிகரான மதிப்புள்ள நிலம் ராணுவ நிலத்துக்கு அருகிலேயே உள்ளதும் குறிப்பிடத்தக்கது’ என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com