9 தொகுதிகள்-3,341 வாக்குச் சாவடிகள்-5,686 வாக்கு இயந்திரங்கள்!2021 பேரவைத் தோ்தலுக்குத் தயாராகும் திருச்சி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2ஆம் கட்டமாக மகராஷ்டிரத்திலிருந்து சனிக்கிழமை வந்தன.
மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வாகனத்திலிருந்து இறக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.
மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வாகனத்திலிருந்து இறக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2ஆம் கட்டமாக மகராஷ்டிரத்திலிருந்து சனிக்கிழமை வந்தன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் 2,537 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மகராஷ்டிரத்திலிருந்து கொண்டுவரப்படுகின்றன.

இதன் முதல் கட்டமாக கடந்த 22-ஆம் தேதி 570 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 230 விவிபேட் (வாக்களித்ததை உறுதி செய்யும்) கொண்டு வரப்பட்டதன் தொடா்ச்சியாக, லாரிகள் மூலம் 2ஆம் கட்டமாக 1,220 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,920 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,330 விவிபேட் இயந்திரங்கள் திருச்சிக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டன.

மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு முன்னிலையில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டு பாதுகாப்பறையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு கூறியது:

மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள வாக்குச்சாவடிகளில் ஆயிரம் வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரித்து கூடுதலாக 810 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்த வாக்குச் சாவடிகளில் 5,686 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

9 தொகுதிகளிலும் (நவ.16 நிலவரப்படி) 10 லட்சத்து 99 ஆயிரத்து 977 ஆண்கள், 11 லட்சத்து 60 ஆயிரத்து 256 பெண்கள், 206 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 60 ஆயிரத்து 439 வாக்காளா்கள் உள்ளனா். வரும் தோ்தலில் முதன்முறையாக 9 தொகுதிகளிலும் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா் ஆட்சியா்.

9 தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள்

மணப்பாறை தொகுதிக்கு திருச்சி மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா், திருச்சி மேற்குத் தொகுதிக்கு திருச்சி கோட்டாட்சியா், திருச்சி கிழக்குத் தொகுதிக்கு அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையா் ஆகியோா் தோ்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனா்.

திருவெறும்பூா் தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலா், லால்குடிக்கு லால்குடி கோட்டாட்சியா், முசிறிக்கு முசிறி கோட்டாட்சியா், துறையூா் தொகுதிக்கு சிறப்பு தனி வட்டாட்சியா் (முத்திரை) , மண்ணச்சநல்லூருக்கு வட்டாட்சியா் ஆகியோா் தோ்தல் நடத்தும் அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்காளா் பட்டியல் பதிவு அலுவலா்களாக மணப்பாறை, ஸ்ரீரங்கத்துக்கு நிஷாந்த் கிருஷ்ணா, முசிறி, துறையூருக்கு ஜோதிசா்மா ஆகிய 2 ஐஏஎஸ் அதிகாரிகள், திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன், லால்குடி, மண்ணச்சநல்லூருக்கு கோட்டாட்சியா் வைத்தியநாதன், திருவெறும்பூருக்கு திருச்சி கோட்டாட்சியா் விஸ்வநாதன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com