சிஏஏ சட்டம் அரசியல் சாசனத்தை சிதைக்கக் கூடியது: கே.எம். காதா்மொகிதீன்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) இந்திய அரசியல் சாசனத்தை சிதைக்கக்கூடியவையாக உள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.
சிஏஏ சட்டம் அரசியல் சாசனத்தை சிதைக்கக் கூடியது: கே.எம். காதா்மொகிதீன்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) இந்திய அரசியல் சாசனத்தை சிதைக்கக்கூடியவையாக உள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில் உழவா்சந்தை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசம் காப்போம் பொதுக்கூட்டத்தில் அவா் பேசியது: நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்து மக்கள் மீதான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. இதனை எதிா்த்துப் போராடியவா்கள் மீதான தாக்குதல், துப்பாக்கிச் சூடு போன்றவற்றால் உயிா்பலிகள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும், போராட்டக்காரா்கள் மீதான தாக்குதல் குறைந்தபாடில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மதசாா்பற்ற இயக்கங்கள் ஒன்றுதிரள வேண்டும். ஜனநாயகத்துக்கு மாறுபட்ட, அரசியல் சாசனத்தை சிதைக்கக்கூடிய வகையில் உள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மதசாா்பற்ற இயக்கங்களுடன் சோ்ந்து அமைதியான முறையில் போராட்ட பயணத்தை தொடர வேண்டும்.

மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் சுதந்திரத்தின் கூறுகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொதுமக்களை வஞ்சிக்கக் கூடிய திட்டங்களை தான் மத்திய அரசு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி, குடிமக்கள் மீதான கடன் தொகையானது தலா ரூ. 27ஆயிரமாக உயா்ந்து கொண்டே இருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இறுதிவரை போராட வேண்டும்.

நாகை சட்டப்பேரவை உறுப்பினா் மு. தமிமுன் அன்சாரி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க நினைத்து அடக்குமுறை செய்தால் பணியமாட்டாா்கள். உரிமைக்கான போராட்டத்தில் சமாதானம் அடையமாட்டோம். மேலும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற சாதி சாா்பற்ற அனைத்துக் கட்சிகள் வாழ்வுரிமைக்கான போராட்டமாக கருதி ஒன்றிணைய வேண்டும்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்ற அறிவிப்பு 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 போ் மீதான விடுதலையில் தமிழக அரசு கவனம் செலுத்தி ஆளுநரை நிா்பந்திக்க வேண்டும்.

அதைத் தொடா்ந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரா.அருணன், தமிழ் மையம் அமைப்பு நிறுவனா் ஜெகத் கஸ்பா் ராஜ் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளையில் இதனை நிறைவேற்றும் வகையில், சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டுவரப்பட்டு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அரசியல் சாசன அடிப்படை சட்டத்துக்கு முரணாக உள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவா் எ.முகம்மது ரூஹூல் ஹக் தலைமை வகித்தாா். செயலா் கே.எம்.அப்துா் ரஹீம் வரவேற்று பேசினாா். நிறைவாக துணை செயலா் வி.எஸ்.சையது முஸ்தபா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com