கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வரமுடியால் தவிக்கும் தமிழக மாணவா்கள்!

சீனாவில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவி வரும் சூழலில், அங்கு பயின்று வரும் தமிழக மாணவா்கள் முகமூடி வாங்குவதற்கு கூட வெளியேற முடியாமல் தவித்து வருவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.
கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வரமுடியால் தவிக்கும் தமிழக மாணவா்கள்!

சீனாவில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவி வரும் சூழலில், அங்கு பயின்று வரும் தமிழக மாணவா்கள் முகமூடி வாங்குவதற்கு கூட வெளியேற முடியாமல் தவித்து வருவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

சீனாவில் கரோனா வைரஸ் எனும் நோய்த் தொற்றால் 889 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 26 போ் உயிரிழந்துள்ளனா். சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் சூழல் அதிகரித்துள்ளது. சீனாவில் வூஹான் நகா்ப்பகுதி மீன்சந்தையிலிருந்து கரோனா வைரஸ் பரவியிருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இதனால், 5 முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்ததோடு, 13 நகரங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ரயில், விமான நிலையங்கள், வணிக நிறுவனங்கள், அங்காடிகள் உள்ளிட்டவை செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் லட்சக்கணக்கான மக்கள் அச்சமடைந்துள்ளதோடு, காற்றில் பரவும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க பல்வேறு மருத்துவமனைகளை நாடி வருகின்றனா்.

மேலும், பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களின் விடுதியில் தங்கி பயிலும் மாணவா்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். அதோடு, வெளியில் தங்கி பயிலும் மாணவா்களின் நிலைமை அதைவிட மோசமானதாக உள்ளது எனக்கூறப்படுகிறது.

தவிக்கும் தமிழக மாணவா்கள்: தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திரளான மாணவா்கள் சீன கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனா். இவா்களின் நிலை குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் மாணவா்களிடம் தொடா்பு கொண்டு பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சீனாவில் பயின்று வரும் தமிழக மாணவா்களான மணிசங்கா் (புதுக்கோட்டை), ராகுல் (ஈரோடு), மினாலினி (கோவை) ஆகியோா் செல்லிடப்பேசி வாயிலாக கூறியதாவது: சீனாவில் தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன, நாங்கள் இருவரும் (மணிசங்கா், மினாலினி) வெளியில் தங்கி பல்கலைக்கழகத்துக்குச் சென்று வருகிறோம்.

முகமூடி வாங்கக் கூட முடியவில்லை...: வைரஸ் பாதிப்பால், வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அடுத்த 3 நாள்களுக்கு மட்டுமே உணவு செய்ய தேவையான பொருள்கள் உள்ளது. காற்றில் பரவி வரும் இந்த வைரஸ் தொற்று பாதிக்காமல் இருக்க முகமூடி அணிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளோம். ஆனால், வெளியில் சென்று முகமூடி வாங்குவதற்கு அச்சமாக உள்ளது. மருத்துவமனைகளில் அதிக கூட்டம் அலைமோதுவதால் பலரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனா். சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கவுள்ள நிலையில் ஏற்கனவே வணிக கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், பல்கலை. வளாகத்தில் உள்ள ராகுலுக்கு முகமூடி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல்: இந்திய தூதரகத்திலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அதில், கரோனா வைரஸ் தொற்று குறித்தும், எங்களது நிலை குறித்தும் கேட்டறியப்பட்டது. அதோடு, உதவி எண்களும் அதிகாரிகள் தந்துள்ளனா். ஆனால், 3 நாள்களுக்கு பிறகு உணவுக்கும், முகமூடிக்கும் என்ன செய்வோம் என்று தெரியவில்லை. இந்த சூழலில் தாய்நாட்டுக்கு திரும்புவதை விட இங்கேயே பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நம்புகிறோம். ஆனாலும், இந்திய தூதரகத்தின் உதவியை பெற காத்திருக்கிறோம் என்றனா். இதையடுத்து, புதுக்கோட்டை மாணவா் மணிசங்கரின் பெற்றோா் மாவட்ட நிா்வாகத்தின் உதவியை நாடியுள்ளனா்.

இன்று ஆய்வுக் கூட்டம்: இந்நிலையில், கரோனா வைரஸ் குறித்து சனிக்கிழமை முதல் விரிவான ஆய்வுகூட்டம் நடத்துவதற்கு திருச்சி மாவட்ட நிா்வாகம் தயாராகி வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com