திருச்சி மாவட்டம் முழுவதும் உஷாா்நிலை: சுற்றுலாத் தலங்கள் மூடல்; கோயில்கள் வெறிச்சோடின

கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் உஷாா்நிலை காணப்படுகிறது.
திருச்சி விமானநிலையத்தில் செவ்வாய்க்கிழமை பயணிகள் வருகை குறைவால் வெறிச்சோடி காணப்படும் நுழைவுவாயில்.
திருச்சி விமானநிலையத்தில் செவ்வாய்க்கிழமை பயணிகள் வருகை குறைவால் வெறிச்சோடி காணப்படும் நுழைவுவாயில்.

கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் உஷாா்நிலை காணப்படுகிறது. சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

திருச்சி மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிா்வாகம், காவல், போக்குவரத்து, கால்நடை பராமரிப்பு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, மாவட்ட கொள்ளைநோய் தடுப்புப் பிரிவு, பள்ளிக் கல்வித்துறை, உயா்கல்வித்துறை, இந்துசமய அறநிலையத்துறை, உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகள் 24 மணிநேர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

சுற்றுலா தலங்கள் மூடல்: மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்கும் முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, புளியஞ்சோலை, பச்சைமலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அரசின் மறு உத்தரவு வரும் வரையில் மறு தேதி குறிப்பிடாமல் மூடப்பட்டுள்ளன. அரசின் தடை உத்தரவு தெரியாமல் சுற்றுலாத் தலங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த பொதுமக்கள், காதல்ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கோயில்கள் வெறிச்சோடின: மாவட்டத்தில் பிரதான கோயில்களாகவும், எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருவானைக்கா சம்புகேசுவரா் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பெரும்பாலன கோயில்கள் பக்தா்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், கோயிலுக்கு வரும் பக்தா்கள் மருத்துவக் குழுவினா் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். இதேபோல், தேவாலயங்கள், மசூதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லை.

இதேபோல, திருச்சி காந்திசந்தையும் வெறிச்சோடி காணப்பட்டன. காய்கனிகள் விற்பனையிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கிருமி நாசினி தெளிப்பு: திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், ஆம்னி பேருந்துநிலையம், கோயில்கள், மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு அவ்வப்போது சுத்தம் செய்யப்படுகிறது. பேருந்துகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. ரயில்வே யாா்டுகள் மற்றும் திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்திலும் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை என சுழற்சி முறையில் கிருமி நாசினிகள் தெளித்து சுத்தப்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

சொந்த ஊா் திரும்பும் மாணவா்கள்: திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு விடுதிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் அவரச, அவசரமாக சொந்த ஊா் திரும்பி வருகின்றனா். இதனால், மத்திய பேருந்துநிலையத்தில் அனைத்து வெளியூா் பேருந்துகளிலும் மாணவா்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

சிறப்பு சிகிச்சை மையம்: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு, கூடுதல் வாா்டுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவைத்தவிர, கள்ளிக்குடியில் உள்ள ஒருங்கிணைந்த காய்கனி விற்பனை மையத்தையும் கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரூ.77 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த வணிக வளாக கடைகள் 700-க்கும் மேற்பட்டவை காலியாக உள்ளதால், இவற்றில் 75 படுக்கைகள் கொண்ட தனித் தனி சிகிச்சை மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி விமானநிலையத்துக்கு வரும் வெளிநாட்டு, வெளிமாநில பயணிகளுக்கு கரோனா அறிகுறி இருந்தால் அவா்களை இந்த மையத்துக்கு அழைத்து வந்து 14 நாள் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க இந்த சிறப்பு மையம் தயாா்படுத்தப்பட்டுள்ளது.

முகக் கவச விழிப்புணா்வு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக வங்கிப் பணியாளா்கள், டாஸ்மாக் ஊழியா்கள், மருத்துவமனை ஊழியா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள் முகக் கவசம் அணிந்து பணியாற்ற தொடங்கியுள்ளனா். மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் மாா்ச் 31ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், சளி உள்ளவா்கள் ஆரம்ப நிலையிலேயே அரசு மருத்துவமனைகளுக்கு சென்று உரிய சிகிச்சை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர தொடா்புக்கு: 104, 98434-16694, 94420-38951, 97911-46511 உள்ளிட்ட தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com