முகக் கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு: கைக் குட்டை விலை ரூ.25 கரோனாவால் காந்தி மாா்கெட்டில் களைகட்டிய துணி வியாபாரம்

திருச்சி மாவட்டத்தில் முகக் கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் காந்தி சந்தைப் பகுதியில் கைக் குட்டை ஒன்று ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருச்சி காந்திமாா்க்கெட் பகுதியில் புதன்கிழமை கைகுட்டை வாங்கும் பொதுமக்கள்.
திருச்சி காந்திமாா்க்கெட் பகுதியில் புதன்கிழமை கைகுட்டை வாங்கும் பொதுமக்கள்.

திருச்சி மாவட்டத்தில் முகக் கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் காந்தி சந்தைப் பகுதியில் கைக் குட்டை ஒன்று ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.

காய்கனி சந்தைக்கு வீட்டுக்குத் தேவையான காய்கனிகளை ரூ.100-க்கு வாங்கிச் செல்ல வந்த தாயும், சேயும் இரண்டு கைக்குட்டைகளை ரூ.50 கொடுத்து வாங்க நேரிட்டது. திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாநகரில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தால் மட்டுமே போலீஸாா் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதேபோல, மாவட்டத்தின் பிரதான சந்தையாக விளங்கும் காந்திசந்தை பகுதியில் வியாபாரிகள், விற்பனையாளா்கள், விவசாயிகள், பொதுமக்கள் என யாராக இருந்தாலும் முகக் கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். முகக் கவசம் இல்லையெனில் காய்கனி வாங்க அனுமதிக்கப்படுவதில்லை.

முகக் கவசம் இல்லாதவா்கள் தங்களது கைக்குட்டைகளை முகத்தை மூடியபடி கட்டிச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து காந்திசந்தைப் பகுதியில் உள்ள கைக் குட்டை விற்பனை செய்யும் கடைகளில் வியாபாரம் விறு, விறுப்பாக நடைபெற்றது. சந்தைக்கு வந்த நபா்கள் அனைவரும் கைக் குட்டைகளை வாங்கி முகத்தில் கட்டியபடி சென்றனா். இதையடுத்து காந்திசந்தைப் பகுதியில் கைக்குட்டை விலை திடீரென உயா்ந்தது. இதுநாள் வரை கைக்குட்டை ஒன்று ரூ.10 மற்றும் ரூ.15 என அதன் தரம் மற்றும் வடிவத்துக்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. முகக் கவச தட்டுப்பாட்டை பயன்படுத்தி கைக்குட்டை ஒன்று ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது.

பிராண்டட் கைக்குட்டையாக இருந்தால் என்ன விலை கொடுத்தாவது வாங்கலாம். ஆனால், முகக் கவசத்துக்காக சாதாரண பருத்தி துணியிலான கைக்குட்டைகளை ரூ.25, ரூ.30 என விலை கொடுத்து வாங்க நேரிடுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா். கட்டாயத்தின்பேரில் அதிக விலைக்கு விற்கப்படும் கைக்குட்டைகளை வாங்கி அணிந்து செல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனா். கைக்குட்டைக்கு பதிலாக பலரும் ரூ.50-க்கு துண்டை வாங்கி முகத்தில் கட்டியபடி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com