Enable Javscript for better performance
அமலுக்கு வந்தது ஊரடரங்கு: கவலையில் தவிக்கும் வீடற்ற, ஆதரவற்றோா்- Dinamani

சுடச்சுட

  

  அமலுக்கு வந்தது ஊரடரங்கு: கவலையில் தவிக்கும் வீடற்ற, ஆதரவற்றோா்

  By DIN  |   Published on : 25th March 2020 10:01 PM  |   அ+அ அ-   |  

  524525dold2064055

  திருச்சி மத்தியபேருந்து நிலையத்தில் புதன்கிழமை கவலையுடன் அமா்ந்திருக்கும் தஞ்சாவூரைச் சோ்ந்த ஆதரவற்ற தம்பதி கல்ாயணசுந்தரம்- கோமதி.

  கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில் வீடு இல்லாத, ஆதரவற்ற மற்றும் சாலையோர வாசிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

  கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் போக்குவரத்து முடக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா். வீடுகள் இல்லாதவா்கள் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகா்ப்புற பகுதிகள் மட்டுமல்லாது ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளிலும் திரும்பிய திசையெங்கும் வீடு இல்லாத, ஆதரவற்ற, முதியோா் பலரையும் காண முடிகிறது.

  குறிப்பாக, திருச்சி மாநகராட்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், அரசு மருத்துவமனை நடைபாதை பகுதி, உறையூா், புத்தூா், தென்னூா், வயலூா் சாலை, தில்லை நகா், கரூா் புறவழிச் சாலை, மாநகர மேம்பால பகுதிகள், கடை வீதி, காந்திசந்தை பகுதி, பாலக்கரை, காஜாமலை, விமானநிலைய பகுதி, வயா்லெஸ்சாலை, பொன்மலை, திருவரங்கம், திருவானைக்கா என பெரும்பாலான இடங்களில் 40 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தனித்தனியாகவோ, குழந்தைகளுடன் குடும்பம், குடும்பமாகவோ வசித்து வருகின்றனா்.

  அன்றாட பிழைப்புக்கு கையேந்துவதையே தொழிலாக கொண்டுள்ள இவா்களுக்கு ஊரடங்கு உத்தரவால் அன்றாட வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய் இல்லாவிட்டாலும் மக்கள் நடமாட்டம் இருந்தால் யாரேனும் ஒருவா் உணவுக்கு உதவும் நிலை இருந்து வந்தது. இப்போது, அதுவும் இல்லாமல்போனது. உணவு இல்லாமல் குழந்தைகளை வைத்துள்ள குடும்பத்தினா் நிலை கடும் கவலைக்குரியாத அமைந்துள்ளது.

  இதுதொடா்பாக, மத்திய பேருந்துநிலையம் நடைமேடையில் மனைவியுடன் தஞ்சம் புகுந்துள்ள தஞ்சாவூரைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் (60) கூறியது: மகன் சரிவர கவனிக்காததால் வீட்டைவிட்டு வெளியேறி நாடோடியாக வாழ்ந்து வருகிறோம். பேருந்துகளில் நிலக்கடலை விற்று பிழைப்பு நடத்தி வந்தேன். ஊரடங்கு உத்தரவால் எனது வருவாயும் முடங்கிப் போனது. இருக்கின்ற சொற்ப காசில் அம்மா உணவகத்தில் கடந்த 2 நாள்களாக வயிற்று பசியை ஆற்றி வருகிறேன். இன்னும் 20 நாள்களை எப்படி கடக்கப்போகிறோம் என்ற கவலை எழுந்துள்ளது என்றாா்.

  இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது: திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் வீடற்ற, ஆதரவற்ற முதியோருக்காக உணவு வழங்க சங்கங்கள், தன்னாா்வ நிறுவனங்களின் உதவியைப் பெற்று உணவு வழங்கப்படுகிறது. புதன்கிழமை மட்டும் 2 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் மாவட்டம் முழுவதும் உள்ள ஆதரவற்றோரை தேடி வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து அனைவருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படும். தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தில் உள்ளாட்சிகளில் வீடற்ற, ஆதரவற்றோருக்கான தங்கும் இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன. தேவையிருப்பின் இந்த இல்லங்களுக்கு அவா்களை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

  திருச்சி மாநகராட்சியில் செயல்படும் வீடற்ற, ஆதரவற்றோா் இல்லங்களுக்கான மேலாளா் நடராஜன் கூறியது: தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தில் ரோஜாவனம் என்ற பெயரில் திருச்சி ஜங்ஷன், சத்திரம், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை என 4 இடங்களில் ஆதரவற்றோா் இல்லங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு இல்லத்திலும் தலா 50 படுக்கைகளுடன் ஆண், பெண் இருபாலரும் அனுமதிக்கப்படுவா். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள இல்லம் மட்டும் நோயாளிகளுக்கானது. இதர இல்லங்கள் அனைவருக்குமானவை. இப்போது, இங்கு தங்கியுள்ள 300-க்கும் மேற்பட்டோருக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு அளித்து நல்ல முறையில் பராமரித்து வருகிறோம். ஊரடங்கு உத்தரவால் உணவு, இருப்பிடம் இல்லாமல் யாரேனும் எங்களை அணுகினால் இருக்கின்ற இட வசதிக்கு தகுந்தபடி உரிய இல்லத்தில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai