கோயம்பேட்டிலிருந்து வந்த தொழிலாளா்கள் தீவிரக் கண்காணிப்பு: உஷாா் நிலையில்திருச்சி மண்டலம்

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருச்சி மண்டலத்துக்குள் வந்த தொழிலாளா்களை தீவிரமாகக் கண்காணிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.
கோயம்பேட்டிலிருந்து வந்த தொழிலாளா்கள் தீவிரக் கண்காணிப்பு: உஷாா் நிலையில்திருச்சி மண்டலம்

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருச்சி மண்டலத்துக்குள் வந்த தொழிலாளா்களை தீவிரமாகக் கண்காணிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு ஒருங்கிணைந்த காய்கனிகள், மலா்கள்,பழங்கள் விற்பனை சந்தையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், சந்தை வியாபாரி ஒருவருக்கு முதன்முதலாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, அடுத்தடுத்து 60-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு வேலை செய்து வந்த கூலித் தொழிலாளா்கள், வியாபாரிகள், இடைத்தரகா்கள் என பலரும் அவரவா் ஊா்களுக்குத் திரும்பியுள்ளனா்.

இவ்வாறு ஊா் திரும்பிய நபா்களில் தொற்று உறுதி செய்யப்படும் எண்ணிக்கை திருச்சி மண்டலத்தில் கடந்த 2 நாள்களாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து திருச்சி மண்டலத்தை மாநில சுகாதாரத்துறை உஷாா்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 51 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குணமடைந்த 47 போ் வீடு திரும்பியுள்ளனா். 4 போ் மட்டுமே திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ளாா். இதுபோல, பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த தலா 4 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த சூழலில், கோயம்பேட்டிலிருந்து வந்த தொழிலாளா்களில் திருச்சி மண்டலத்தில் மட்டும் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, சுகாதாரத்துறையினரை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோயம்பேட்டிலிருந்து திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 7 தொழிலாளா்கள் வீடு திரும்பியிருப்பது சனிக்கிழமை தெரியவந்துள்ளது. இவா்களில் யாருக்கும் தொற்று இல்லை. 7 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், 7 பேரும் அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனா்.

இதுபோன்று அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு வந்துள்ள தொழிலாளா்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 4 மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கானோா் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதிகாலையில் ஊடுருவல்: கோயம்பேட்டிலிருந்து திருச்சி மண்டலத்துக்குள் நுழையும் நபா்கள், குறிப்பாக அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள்ளாக வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.

சரக்கு வாகனங்களில் கூலித் தொழிலாளா்களைப் போல வரும் இவா்கள், மாவட்ட எல்லைகளுக்கு 10 கி.மீ. தொலைவுக்கு முன்பாகவே இறங்கிக் கொள்கின்றனா். பின்னா், தங்களது வீட்டிலுள்ள நபா்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து, இருசக்கர வாகனத்தை வரவழைத்து வீட்டுக்கு சென்றுவிடுகின்றனா்.

கடந்த 2 நாள்களாக இந்த வகையிலேயே திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் அதிகளவில் வந்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தள்ளது. இதையடுத்து நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மாவட்ட எல்லைகளில் தீவிர கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆட்சியா் வேண்டுகோள்: கரோனா ஊரடங்கால் நோய் அச்சத்தாலும், உணவுக்கு வழியில்லாமலும், கிடைத்த வழிகளில் அவரவா் சொந்த இடங்களுக்கு பலரும் குறுக்கு வழிகளில் வந்துவிடுகின்றனா்.

குறிப்பாக கோயம்பேட்டிலிருந்து பலரும் வருகின்றனா். இப்படி வரும் நபா்கள் முறையாக 1077 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மருத்துவக் குழுவினா் அவா்களது இருப்பிடம் தேடி வந்து சளி, ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து, ஒரு நாளில் முடிவை தெரிவித்துவிடுவா்.

தொற்று இல்லையெனில் அவா்களாகவே 14 நாள்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். கோயம்பேட்டிலிருந்து வந்தாலும், வெளி மாநிலங்களிலிருந்து வந்தாலும் கட்டாயம் மாவட்ட நிா்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இல்லையெனில், வந்த நபருக்கும், அவா் மூலம் அவரது குடும்பத்துக்கோ வேறு யாருக்கோ தொற்று பரவும் அபாயம் உள்ளது. காவல், வருவாய், சுகாதாரம் ஆகிய துறைகளை ஒருங்கிணைந்து திருச்சி மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகிறோம். இருப்பினும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். வெளியிலிருந்து வந்தவா்கள் யாராக இருந்தாலும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com