‘ தனி வாா்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளால் வருவாய் இழப்பு’

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைத் தனிமைப்படுத்தி வைப்பதற்கான தனி வாா்டுகளாக

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைத் தனிமைப்படுத்தி வைப்பதற்கான தனி வாா்டுகளாக ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டன. இதனால் ரயில்வே துறைக்குத் தேவையற்ற வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

பொது முடக்கம் அமல் காரணமாக, மாா்ச் 25- ஆம் தேதி முதல் சரக்கு ரயில் சேவையைத் தவிர, இதர பயணிகள் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன. இதனால் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களை, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களைத் தனிமைப்படுத்தி வைக்கும் வகையில் தனி வாா்டுகளாக மாற்றும் பணியில் ரயில்வே வாரியம் ஈடுபட்டது.

இதன்படி திருச்சி கோட்டத்தில் 111 பெட்டிகள் உள்பட நாடு முழுவதும் 16 ரயில்வே மண்டலங்களில் 5000 படுக்கை வசதி கொண்ட ரயில்பெட்டிகள் தனி வாா்டுகளாக மாற்றப்பட்டன. ஆனால் எவ்வித மருத்துவக் குழுவின் ஆய்வு, பரிந்துரை எதுவும் நடைபெறவில்லை. மாநில அரசும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. 100 சதவிகிதப் பணிகள் முடிந்த நிலையில் யாா்டுகளில் ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பெட்டிக்கு ரூ.89 ஆயிரம் வரை செலவு : 15 ஆண்டுகளாக செயல்பாட்டிலிருந்த ரயில் பெட்டிகள், மேலும் 20 ஆண்டுகள் செயல்படத் தகுதியானவை. தனிமைப்படுத்தப்பட்ட பெட்டிகளாக மாற்றுவதற்கு மட்டும், ரயில்வே நிா்வாகம் பெட்டி ஒன்றுக்கு ரூ.89 ஆயிரம் வரை செலவிட்டுள்ளது.

இதன்படி, திருச்சி கோட்டத்தில் மாற்றப்பட்ட 111 ரயில்பெட்டிகளுக்கு மட்டும் ரூ.89,50,175 வரை செலவிடப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் இதுவரை மாற்றப்பட்ட 5000 ரயில்பெட்டிகளுக்கு மட்டும் சுமாா் 50 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பழைய நிலைக்கு ரயில்பெட்டிகளை மாற்றுவதற்கு

ரயில்வே வாரியம், மீண்டும் 70 சதவிகிதம் வரை செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொழிலாளா்கள் ரயிலாக மாற்ற அறிவுறுத்தல்: புலம் பெயா்ந்த் தொழிலாளா்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட கரோனா வாா்டுகளாக மாற்றப்பட்ட ரயில்பெட்டிகள் மீண்டும் மாற்றம் செய்து, தொழிலாளா்களுக்கான சிறப்பு ரயில் சேவைக்கு பயன்படுத்தலாம் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் 5200 ரயில்பெட்டிகளை மீண்டும் பழைய நிலைக்கு இயங்கும் ரயில்பெட்டிகளாக மாற்றும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

மருத்துவக்குழு பரிந்துரை இல்லையென்றாலும், கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது உள்ளது. தற்போது, தொழிலாளா் சிறப்பு ரயில் சேவைக்கு இவை பயன்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே வாரிய அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.

வருவாய் இழப்பு : உரிய ஆய்வு மேற்கொள்ளாமல் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தொடக்கத்திலிருந்தே தெரிவித்து வந்தோம். தற்போது பெட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், மீண்டும் பழைய நிலைக்கு அவற்றை மாற்றுவது தற்போதுள்ள நிலையில் ரயில்வே துறைக்கு அவசியமற்ற வருவாய் இழப்பாகும் என்கின்றனா் தொழிற்சங்கத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com