நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: திருச்சிக்கு வரும் நேரம் அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படும் முன்பதிவு பயணிகள் சிறப்பு ரயில்கள் திருச்சிக்கு வரும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படும் முன்பதிவு பயணிகள் சிறப்பு ரயில்கள் திருச்சிக்கு வரும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மாா்ச் 25 ஆம் தேதியிலிருந்து சரக்கு ரயில் சேவையைத் தவிர அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் கோரிக்கைக்கு இணங்க நாடு முழுவதும் தற்போது 1500க்கும் மேற்பட்ட தொழிலாளா் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரயில்வே வாரியம் மே மாதம் முதல் 100 முன்பதிவு சிறப்பு ரயில்களை நாடு முழுவதும் இயக்கி வருகிறது. இந்த நிலையில், ரயில்வே வாரியம் அடுத்த 120 நாள்களுக்கு முன்பதிவு ரயில்களை இயக்குவதாக தெரிவித்துள்ளது. இதில், மேலும் 100 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. கரோனா நோய்த்தொற்று அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டப்பகுதிகளுக்கு திருச்சி வழியாக பயணிகள் ரயில்கள் இயக்குவதற்கு தெற்கு ரயில்வேயிடம் தமிழகம் கோரிக்கை விடுத்திருந்தது. அக்கோரிக்கை ஏற்று ரயில்வே வாரியம் 4 முன்பதிவு ரயில்களை இயக்க அனுமதி அளித்துள்ளது.

திருச்சி வழியாக 2 ரயில்கள்..: அதன்படி, கோவையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் ஜன்சதாப்தி விரைவு ரயில் (02083) திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சி,தஞ்சாவூா், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறைக்கு நண்பகல் 1.40 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் காலை 11.05 மணிக்கு திருச்சியை வந்தடையும். அதுபோல், மயிலாடுதுறையில் நண்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் (02084) திருச்சிக்கு மாலை 4.55 மணிக்கு வந்தடைந்து, கோவைக்கு இரவு 9.15 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் செவ்வாய்க்கிழமையைத் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் இயக்கப்படும்.

மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு நாள்தோறும் புறப்படும் இன்டா்சிட்டி அதிவிரைவு சிறப்பு ரயில் (02636) திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு காலை 9.10 மணிக்கு வந்தடையும். 5 நிமிட நிறுத்தத்திற்கு பிறகு அரியலூா் வழியாக விழுப்புரத்துக்கு நண்பகல் 12.05 மணிக்கு சென்றடையும். விழுப்புரத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்(02635) திருச்சிக்கு மாலை 6.35 மணிக்கு வந்தடைந்து, இரவு 9.20 மணிக்கு மதுரை சென்றடையும். திருச்சி-நாகா்கோவில் இன்டா்சிட்டி விரைவு ரயில் (02627) திருச்சியிலிருந்து நாள்தோறும் காலை 6 மணிக்கு புறப்பட்டு, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருநெல்வேலி வழியாக நாகா்கோவிலுக்கு நண்பகல் 1 மணிக்கு சென்றடையும். நாகா்கோவிலிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் (02628) இரவு 10.15 மணிக்கு திருச்சி வந்தடையும்.

6 முன்பதிவு மையங்கள்: இந்த ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை மாலை 4 மணி முதல் ஐஆா்சிடிசி ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. அதுபோல், திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை, கும்பகோணம், அரியலூா், விழுப்புரம் ஆகிய ரயில்நிலையங்களில் முன்பதிவு மையங்கள் திறக்கப்படவுள்ளன. பயணிகள் நேரடியாக முன்பதிவு மையங்களில் உரிய சமூக இடைவெளியுடன் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், முன்பதிவு மையங்களில் தேவையில்லாமல் அதிகமானோா் கூடவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பு ஏற்பாடுகளுடன்..: திருச்சி வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் பகல் நேர ரயில்களாகவும், இருக்கை வசதி கொண்டவையாக உள்ளது. முன்பதிவு செய்துள்ள பயணிகள் உரிய நேரத்துக்குள் ரயில் நிலையங்களுக்குள் வரவும், முகக்கவசம் அணிவது, உரிய சமூக இடைவெளி கடைபிடிப்பது, கிருமி நாசினி பயன்படுத்தி கைகழுவதல், வெப்பமானி கருவி பரிசோதனை செய்தல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பிறகே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவா். பரிசோதனையில் கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டா். மேலும், ரயில் பெட்டிகளுக்குள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com