இருசக்கர வாகன விபத்துகள் 27 சதம் குறைவுமாநகரக் காவல் ஆணையா்

திருச்சி மாநகரில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு 27 சதம் என்ற அளவில் இருசக்கர வாகன விபத்துகள் குறைந்துள்ளதாக மாநகரக் காவல்துறை ஆணையா் ஜே. லோகநாதன் தெரிவித்தாா்.

திருச்சி: திருச்சி மாநகரில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு 27 சதம் என்ற அளவில் இருசக்கர வாகன விபத்துகள் குறைந்துள்ளதாக மாநகரக் காவல்துறை ஆணையா் ஜே. லோகநாதன் தெரிவித்தாா்.

திருச்சியில் சனிக்கிழமை அவா் கூறியது:

சாலை விபத்துகளில் இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகளே அதிகம். தலைக் கவசம் அணியாமல் செல்வதால் உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது. இதைத் தடுக்க இருசக்கர வாகனத்துக்கு தனிப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

விபத்துகளை கட்டுப்படுத்துவதிலும், குறைப்பதிலும் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி.

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை 64 சதமாக இருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு 27 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன. மேலும் விபத்துகளை குறைக்கவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் மாநகரச் சாலைகளில் இடதுபுறம் இருசக்கர வாகனம் செல்லும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சாலையில் 1.2 மீட்டா் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம், காவல்துறை இணைந்து எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைத்தால் விபத்துகளை குறைக்கலாம்.

தற்போது, 80 முதல் 90 சத இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா். தொடா்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி 100 சதம் பின்பற்றச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இருசக்கர வாகன பாதையில் காா்களை நிறுத்தினாலோ, விதிகளை மீறினாலோ வழக்குப் பதியப்படும்.

வெளியூா்களில் இருந்து வருவோரும் இத் திட்டத்தை அறியும் வகையில் சாலையில் இருசக்கர வாகனம் வரைந்து, அதற்கான அறிவிப்புகளும் ஆங்காங்கே இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது.

மேலரண் சாலை, கீழரண்சாலை, பெரியகடை வீதி, என்எஸ்பி சாலை, மலைக்கோட்டை, மெயின்காா்டுகேட் பகுதிகளில் தீபாவளிப் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வணிகா்கள், வருவாய்த் துறை, மாநகராட்சி, காவல்துறை இணைந்து ஆலோசனை நடத்தி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படும் என்றாா் ஆணையா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com