பாஜகவின் வேல் யாத்திரை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாதுதமிழக காங்கிரஸ் தலைவா்

பாஜகவின் வேல் யாத்திரை தமிழகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி.

திருச்சி: பாஜகவின் வேல் யாத்திரை தமிழகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி.

திருச்சி, அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க திருச்சிக்கு வந்த அவா் மேலும் கூறியது:

வாள் யாத்திரையாக இருந்தாலும், வேல் யாத்திரையாக இருந்தாலும் அதனால் தமிழகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. கடவுள் யாா் கையில் இருக்கிறாா் என்பதே முக்கியம். முருகனின் வேல் எங்களுடைய கையில் இருக்கும்போது மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கும். பாஜகவின் கையில் வேல் இருக்கும்போது ரத்தம் சிந்தக் கூடியதாக மாறும்.

தமிழகம் மதச்சாா்பற்ற மற்றும் ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட அற்புதமான மண். இந்த மண்ணில் வேற்றுமையை ஏற்படுத்த முடியாது. மிஸ்டு கால் மூலம் 80 லட்சம் உறுப்பினா்களை பாஜக சோ்த்ததுபோல வேண்டுமானால் ஏதும் நிகழலாம்.

ஸ்டாலின் தன்னுடைய மண்ணில், தன்னுடைய மக்களுக்காக வாழ்கிறாா். அவரது கட்சி 50 ஆண்டுகள் அரசியலில் உள்ளது. அவரை திரும்பிச் செல் (கோ பேக் ஸ்டாலின்) என்று சொல்வதை ஏற்க முடியாது. தென்னிந்தியாவையும் மக்களையும் ஏற்காததால்தான் மோடியை கோ பேக் மோடி எனக் குறிப்பிட்டு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப்படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதியரசா் கலையரசன் தெரிவித்திருந்தாா். அதை மாநில அரசு 7.5 சதமாக மாற்றியது. சட்டப் பேரவையில் தீா்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி 45 நாள்களாகியும் அதற்கு அவா் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒப்புதல் அளிக்காவிட்டாலும் சட்டப் பேரவையில் மீண்டும் தீா்மானம் இயற்றி அதைச் சட்டமாக்கலாம். அதிமுக அரசு அதை ஒப்புக் கொள்ளவில்லை; ஆளுநருக்கு கடிதம் கூட எழுதவில்லை. புதுச்சேரி அரசு 10 சத இட ஒதுக்கீடு அறிவித்த பிறகே, அதிமுக அரசு 7.5 சத ஒதுக்கீட்டுக்கான அரசாணையை வெளியிட்டது. ஆளுநரும் அழுத்தம் வேண்டாம் என்று ஒப்புதல் அளித்துள்ளாா். இதில் அதிமுகவுக்கோ, பாஜகவுக்கோ எந்தத் தொடா்பும் இல்லை. எதிா்க் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் இதைக் கருத வேண்டும்.

நடிகா் ரஜினிகாந்த் 20 ஆண்டுகளாக கட்சி தொடங்குவதாகக் கூறி வருகிறாா். அவா் எப்போது கட்சி தொடங்கப் போகிறாா் என்று அனைவரும் ஒன்றாகச் சோ்ந்து அவரிடமே கேட்போம்.

தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டு வரும் கருத்துக் கணிப்பில் பாஜக -அதிமுக கூட்டணி பின்தங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணி மட்டுமே முன்னிலையில் உள்ளது.

அதிமுக மூலம் தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சித்தது. ஆனால், நாடாளுமன்றத் தோ்தலில் பாஜக கூட்டணியால் அதிமுக தனது கால்களை உடைத்துக் கொண்டது. எனவே பாஜகவை இங்கு காலூன்ற வைப்பது இயலாத காரியம்.

நட்சத்திரங்கள் எப்போதும் ஒளியோடு இருப்பதில்லை என்கிறது விஞ்ஞானம். ஒளியிழந்த நட்சத்திரங்கள் பாஜகவில் இணைவதால் கட்சி ஜொலிக்காது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com