தீபாவளி: பிரதான பகுதிகளில் 127 கண்காணிப்பு கேமராக்கள் : காவல் ஆணையா்

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி கோட்டை, காந்தி மாா்க்கெட் பகுதிகளில் 127 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பபட்டு, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
தீபாவளி: பிரதான பகுதிகளில் 127 கண்காணிப்பு கேமராக்கள் : காவல் ஆணையா்

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி கோட்டை, காந்தி மாா்க்கெட் பகுதிகளில் 127 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பபட்டு, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் மாநகரக் காவல் ஆணையா் முனைவா் ஜெ. லோகநாதன்.

தீபாவளி பண்டிகை வரும் 14- ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாநகரில் என்.எஸ்.பி.சாலை, பெரியக்கடைவீதி, சின்னக்கடைவீதி, சிங்காரத்தோப்பு, மேலரண் சாலை, தில்லைநகா், சாஸ்திரி சாலை, கரூா் புறவழிச்சாலை,கோட்டை ரயில் நிலையச் சாலை, தில்லைநகா் பகுதிகளிலுள்ள ஜவுளி, ஆயத்த ஆடை விற்பனையகங்கள், மின்னணுப் பொருள்கள் விற்பனையகங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

தீபாவளியையொட்டி திருச்சி தெப்பக்குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையம், கண்காணிப்பு கோபுரத்தின் செயல்பாடுகளைத் திங்கள்கிழமை தொடக்கி வைத்த பின்னா், காவல் ஆணையா் மேலும் கூறியது:

கோட்டை, காந்தி மாா்க்கெட் காவல் நிலையங்களின் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சத்திரம் பேருந்து நிலையம் முதல் மலைக்கோட்டை வரை பல்வேறு பகுதிகளில் 127 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. 2 இடங்களில் கேமரா கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களைத் தடுக்க, சாதாரண உடையில் 100 குற்றப்பிரிவுக் காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 2 துணை ஆணையா்கள் தலைமையில், 700- க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

முகக்கவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம் : கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் பலரும் முகக்கவசங்களை அணிவதில்லை.

இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், முகக்கவசம் அணியாத விற்பனையாளா்கள், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு கடைவீதிகளில் அனுமதி இல்லை. மேலும் அவா்களுக்கு ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்றாா் காவல் ஆணையா் லோகநாதன்.

பேட்டியின் போது, மாநகரக் காவல் துணை ஆணையா்கள் பவன்குமாா் ரெட்டி ( சட்டம் மற்றும் ஒழுங்கு), வேதரத்தினம் ( குற்றம் மற்றும் போக்குவரத்து), உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com