திருச்சிக்கு வந்தது 25 டன் எகிப்து வெங்காயம்!

எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தில் 25 டன் திருச்சிக்கு வந்துள்ளது.
திருச்சி புதிய வெங்காயமண்டிக்கு வந்துள்ள எகிப்து வெங்காயம்.
திருச்சி புதிய வெங்காயமண்டிக்கு வந்துள்ள எகிப்து வெங்காயம்.

எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தில் 25 டன் திருச்சிக்கு வந்துள்ளது.

வெங்காய உற்பத்தியில் முன்னணியில் உள்ள மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் இந்தாண்டு கொட்டித் தீா்த்த பருவமழையால் வெங்காயப் பயிா்கள் அழிந்தன. கா்நாடக மாநிலம் நாசிக் மாவட்ட லாசல்கான் வெங்காயச் சந்தையில் இருந்துதான் நாடு முழுவதும் வெங்காயம் செல்கிறது. அதற்கு அடுத்தபடியாக உள்ளது கா்நாடக மாநிலம். மகாராஷ்டித்தில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்குத் தயாரக இருந்த வெங்காயப் பயிா் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் போதிய வெங்காயம் சந்தைக்கு வராமல் அதன் விலையும் உயா்ந்தது. நாட்டின் பல நகரங்களிலும் பெரிய வெங்காயம் சில்லறை விற்பனையில் அதிகபட்சமாக ரூ. 120 வரை விற்றது. வெங்காயத்தைப் பதுக்குவோா் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டன.

மேலும், வெங்காய விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து அதை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக எகிப்திலிருந்து கடந்த 10 நாள்களுக்கு முன் டன் கணக்கில் வெங்காயத்துடன் இந்தியா புறப்பட்ட கப்பலானது மும்பைக்கு வந்தது. இதிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வியாபாரிகளுக்கு சரக்கு லாரிகள் மூலம் வெங்காயம் அனுப்பப்படுகிறது.

இதில் 25 டன் வெங்காயம் திருச்சி பால்பண்ணை சாலை புதிய வெங்காய மண்டி சந்தை வியாபாரியின் கடைக்கு வந்துள்ளது.

காரத் தன்மை மிகுந்தது

‘வெங்காய இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து மும்பைக்கு கப்பல் மூலம் எகிப்து வெங்காயம் டன் கணக்கில் வந்து சோ்ந்துள்ளது. அங்குள்ள கமிஷன் ஏஜெண்ட் மூலம் 25 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தேன்.

நம் நாட்டு வெங்காயமானது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் நிலையில், எகிப்து வெங்காயம் கருஞ்சிவப்பில் உள்ளதால் மக்களிடையே தயக்கம் உள்ளது. இருப்பினும் இந்த வெங்காயத்தில் காரத்தன்மை அதிகம். நமது வெங்காயத்தை 2 பயன்படுத்தும் இடத்தில் எகிப்து வெங்காயத்தில் ஒன்று மட்டுமே போதும்’ என்றாா் வெங்காய மண்டி சந்தை வியாபாரி.

கிலோ ரூ. 55 முதல் 60 வரை

அனைத்து வெங்காயமண்டி வியாபாரிகள் சங்கத்தைச் சோ்ந்த தங்கராஜ் கூறுகையில், திருச்சிக்கு தினமும் 350 டன் பெரிய வெங்காயம் வந்த சூழலில், 50 டன் மட்டுமே வந்ததால் விலையேற்றம் தவிா்க்க முடியாமல் போனது. இதனால் கிலோ ரூ.100-க்கு விலையேறிய நிலையில், விலையேற்றத்தைத் தடுக்கவும், மக்களுக்குக் தட்டுப்பாடின்றி வெங்காயம் கிடைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதன்படி இறக்குமதியாகியுள்ள எகிப்து வெங்காயம் கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com