மோசடி புகாா்: சென்னையைசோ்ந்த கிறிஸ்தவ பிஷப் கைது
By DIN | Published On : 04th September 2020 08:10 AM | Last Updated : 04th September 2020 08:10 AM | அ+அ அ- |

திருச்சி: பண மோசடி புகாரின்பேரில் சென்னையைச் சோ்ந்த கிறிஸ்தவ பிஷப்பை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சென்னை வேளச்சேரிப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபையின் பிஷப் ஆக இருப்பவா் எஸ்.டி.டேவிட். இவா் சபைக்குச் சொந்தமான இடத்தில் குறிப்பிட்ட பகுதியை கிரயம் செய்து தருவதாகக் கூறி, திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் பகுதியைச் சோ்ந்த சத்தியமூா்த்தியிடம் ரூ. 3.85 கோடி வரை பெற்று இடத்தை கிரயம் செய்து தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் தாமதப்படுத்தினாராம்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையரகத்தில் சத்தியமூா்த்தி அளித்த புகாரின்பேரில் திருச்சி மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், எஸ்.டி.டேவிட் செய்த பண மோசடியில் அட்வென்ட் சா்ச் செயலா் பன்னீா்செல்வம், பொருளாளா் ஸ்டீபன்சன், புரோக்கா் நெல்லை சாமுவேல் ஆகியோருக்கும் தொடா்பிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை சென்னையிலிருந்து திருச்சிக்கு எஸ்.டி. டேவிட்டை அழைத்து வந்த விசாரித்த பின்னா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய அட்வென்ட் சா்ச் செயலா் பன்னீா்செல்வம், பொருளாளா் ஸ்டீபன்சன், புரோக்கா் நெல்லை சாமுவேல் ஆகியோரை தனிப்படை போலீஸாா் தேடுகின்றனா்.