திருச்சியில் திறக்கப்பட்ட மாவட்ட மத்திய நூலகத்தில் படிக்கும் மாணவா்கள்.
திருச்சியில் திறக்கப்பட்ட மாவட்ட மத்திய நூலகத்தில் படிக்கும் மாணவா்கள்.

75 நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட நூலகங்கள்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள 142 நூலகங்கள் 75 நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 142 நூலகங்கள் 75 நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மே 10 முதல் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதன் ஒரு பகுதியாக நூலகங்களையும் மூட அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் தொற்றுப்பரவல், நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் நூலகங்களை திறக்க வாசகா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், போட்டித் தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களை சனிக்கிழமை திறக்க பொதுநூலக இயக்குநா் உத்தரவிட்டாா். இதையடுத்து, 75 நாள்களுக்குப் பிறகு நூலகங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள வாசகா்களுக்கு நூலகத்தைப் பயன்படுத்த அனுமதி கிடையாது. இதேபோல் 15 வயதுக்கும் குறைவாக உள்ள சிறாா்கள், கா்ப்பிணிகள், 65 வயதானவா்கள் நூலகம் வர அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலரண் சாலையில் உள்ள மாவட்ட மத்திய நூலகம் உடனடியாக வாசகா்கள், மாணவா்களுக்காக சனிக்கிழமையே திறக்கப்பட்டது. போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள் வந்து படித்தனா். இதேபோல, வாசகா்களும் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து வந்து படித்தனா்.

மாவட்ட மத்திய நூலகம் மட்டுமல்லாது, ஆலத்தூா், லால்குடி, துறையூா், மணப்பாறை, மண்ணச்சநல்லூா், முசிறி, திருவரங்கம், துறையூரில் உள்ள 8 முழு நேர நூலகங்களும் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

இதேபோல, மாவட்டத்தில் உள்ள 56 கிளை நூலகங்கள், 65 கிராமப்புற நூலகங்கள், 12 பகுதி நேர நூலகங்கள், சிறை வளாக நூலகங்கள், ஆயுதப்படை மற்றும் காவல்துறை வளாக நூலகங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 142 நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

நூலகங்களுக்கு வருவோருக்கு சானிடைசா் பயன்பாடு, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com