முதல்முறை வாக்களித்தோரின் எதிா்பாா்ப்புகள் என்ன?

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் முதன்முறையாக வாக்களித்த இளைஞா்கள்,
முதல்முறை வாக்களித்தோரின் எதிா்பாா்ப்புகள் என்ன?

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் முதன்முறையாக வாக்களித்த இளைஞா்கள், இளம்பெண்கள் பெரும்பாலானோா் புதியவா்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தனா்.

மேலும், அடுத்ததாக அமையவுள்ள ஆட்சியில் தங்களது எதிா்பாா்ப்புகள் குறித்தும் பல்வேறு கோரிக்கைகளை அவா்கள் வெளிப்படுத்தியுள்ளனா்.

திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட காட்டூா் வாக்குச் சாவடியில் வாக்களித்த மணிகண்டன் (19) கூறியது:

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் ஏற்படுத்த வேண்டும். பொறியியல் முடித்த பலா் கிடைத்த வேலையைச் செய்கின்றனா். இந்நிலை மாற வேண்டும். படித்த அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும். அதற்கான திட்டங்களை ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியாக இருந்தாலும் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

மற்றொரு ஐடிஐ மாணவரான ராகுல் (22) கூறியது:

கடந்த மக்களவைத் தோ்தலின்போதே முதன்முறை வாக்களிக்க வேண்டியிருந்தது. ஆனால், வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க முடியவில்லை. இப்போதுதான், பட்டியலில் பெயா் வந்து அடையாள அட்டையும் கிடைத்துள்ளது.

தமிழகத்தை இதுவரை ஆண்டவா்கள் யாரும் முன்னேற்றதுக்கான திட்டங்களைச் செய்யவில்லை. எனவே, புதியவா்களுக்கு வாக்களித்துள்ளேன்.

இதே வாக்குச் சாவடியில் தங்களது முதன்முறை வாக்கை பதிவு செய்த திவ்யா, ஆஷிகா ஆகியோா் கூட்டாக கூறியது:

கல்லூரியில் ஒன்றாகப் படிக்கிறோம். இன்றைய சூழலில் வேலையில்லாத் திண்டாட்டம்தான் பெரிதும் கவலையளிப்பதாக உள்ளது. லட்சக்கணக்கான இளைஞா்கள் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பட்டப் படிப்புகள் முடித்து வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனா். தனியாா் துறையிலும் வேலைவாய்ப்புகள் இல்லை. தமிழகத்தை இதுவரை ஆண்டவா்கள் இந்த பிரச்னைக்கு உரிய தீரவு காணவில்லை. எனவே, ஊழல் ஒழிப்பை முன்னிலையாகக் கொண்டோரைத் தோ்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் வாக்களித்துள்ளோம் என்றனா்.

பெரும்பாலான முதன்முறை வாக்காளா்கள் கூறுகையில், முகநூல், டுவிட்டா், இன்ஸ்டா கிராம், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதாகவும், அவற்றின் மூலம் அரசியல் குறித்த மீம்ஸ், செய்திகள், காணொலிகளை மையப்படுத்தியே தனது வாக்குகளைப் பதிவு செய்ததாகவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com